அசாமில் அடுத்த வாரம் பிரச்சாரத்தை தொடங்கும் ராகுல் காந்தி!
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வடகிழக்கு மாநிலங்களில் தீவிர பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.
வடகிழக்கில் உள்ள 7 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த தடவை வலுவான கூட்டணி அமையவில்லை. இதை பயன்படுத்தி வட கிழக்கு மாநிலங்களில் அதிக வெற்றிகளை பெற வேண்டும் என்று ராகுல் விரும்புகிறார்.
வடகிழக்கு மாநிலங்களில் மொத்தம் 14 எம்.பி. தொகுதிகள் உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா 7 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்திருந்தது.
இந்த தடவை 6 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று ராகுல் இலக்கு நிர்ணயித்துள்ளார். இதை கருத்தில் கொண்டு ராகுல் அடுத்த வாரம் வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல உள்ளார்.
அசாம் மாநிலத்தில் அவர் 26-ந்தேதி பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார்.
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்தது. இதற்கு வடமாநில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே குடியுரிமை சட்டத்தை கையில் எடுத்து பிரசாரம் செய்ய ராகுல் முடிவு செய்துள்ளார்.
ஆனால் ராகுல் பிரசாரத்தை முறியடிக்க ஏற்கனவே பா.ஜனதா வட கிழக்கு மாநிலங்களில் பல்வேறு குழுக்களை அமைத்து பணிகளை தொடங்கி விட்டது. பிரதமர் மோடி ஏற்கனவே அசாமில் பிரசாரத்தை தொடங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமித்ஷாவும் வடகிழக்கு மாநிலங்களில் பல தடவை பிரசாரம் செய்து முடித்துள்ளார். #Congress