நாளை அமித்ஷா கேரளா வருகிறார்!
பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மாநிலங்களில் வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. மராட்டியத்தில் சிவசேனையுடன் உடன்பாடு கண்ட பாரதிய ஜனதா, தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.
இது போல கேரளாவிலும் வலுவான கூட்டணி அமைக்க பாரதிய ஜனதா முயற்சி செய்து வருகிறது. இதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ள நிலையில் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அடிக்கடி கேரளா சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அமித்ஷா நாளை மீண்டும் கேரளா வருகிறார். பாலக்காட்டில் நடக்கும் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
மேலும் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றியும் ஆலோசனை நடத்துகிறார்.
சபரிமலை விவகாரத்தில் பாரதிய ஜனதா பக்தர்களுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இதன் மூலம் கட்சியின் செல்வாக்கு அதிகரிக்கும் என்று கணக்கு போட்டது.
ஆனால் சமீபத்தில் நடந்த கேரள உள்ளாட்சி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இதுகுறித்தும் நாளைய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.