பெண்கள் டி20 கிரிக்கெட் – நியூசிலாந்திடம் இந்திய அணி தோல்வி
நியூசிலாந்து – இந்தியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி தொடக்க வீராங்கனை சோபி டிவைன் 48 பந்தில் 62 ரன்கள் விளாச 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது.
பின்னர் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய வீராங்கனைகள் களம் இறங்கினார்கள். பிரியா புனியா, ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள். பிரியா 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து மந்தனா உடன் ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக ஸ்மிரி மந்தனா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மந்தனா 24 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இதன்மூலம் அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
இந்திய அணியின் ஸ்கோர் 11.3 ஓவரில் 102 ரன்னாக இருக்கும்போது மந்தனா 34 பந்தில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 103 ரன்னாக இருக்கும்போது ரோட்ரிக்ஸ் 38 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிக்க இந்திய பெண்கள் அணி 136 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து பெண்கள் அணி 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.