அரசியல் கட்சி கூட்டணியில் பல திருப்பங்கள் ஏற்படும்! – அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:
தேர்தலுக்கு சில நாட்கள்தான் உள்ளன. அதனால் அரசியல் கட்சி கூட்டணியில் பல திருப்பங்கள் ஏற்படும். எதிரில் இருப்பவர்களும் எங்களிடம் வரக்கூடும். அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி அமையும். இதுதான் மக்களைக் காக்கும் கூட்டணியாக அமையும்.
கூட்டணி அமைந்த பிறகுதான் தொகுதி பங்கீடு பற்றி முடிவு செய்யப்படும். தமிழகத்தில் முதல் கட்டத்தில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவதுதான் நல்லது என்பது பொதுவான கருத்து. அகில இந்திய ரீதியிலும் ஒரே கட்டமாக நடத்தலாம்.
ஆனால் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ளதால் நிர்வாக வசதிக்காக அப்படி வெவ்வேறு கட்டத்தில் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துகிறது.
பா.ம.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா? என்று கேட்கிறீர்கள். தி.மு.க. ஒரு தீய சக்தி என்று அடையாளம் காட்டிச் சென்றவர் எம்.ஜி.ஆர். அதே வழியில் ஜெயலலிதாவும் சென்றார். இன்றும் அப்படித்தான் அ.தி.மு.க. சென்று கொண்டிருக்கிறது.
தி.மு.க., அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் மட்டும்தான் எங்களின் எதிரி. எனவே இவர்களை தவிர மற்ற கட்சிகள் தாராளமாக எங்களுடன் வந்து கூட்டணி குறித்து பேசலாம். இதில் அ.தி.மு.க.வுக்கு ஆட்சேபனை இல்லை.
அ.தி.மு.க. தேர்தல் விண்ணப்ப மனுவை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் வாங்கிச் சென்றதை, குடும்ப ஆதிக்கம் என்ற ரீதியில் டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியதாக கூறுகிறீர்கள்.
அவர் தொடர்ந்து அ.தி.மு.க.வில் பணியாற்றுபவர்தான். விண்ணப்பத்தை அவர் வாங்கியதில் தவறு ஏதும் இல்லை. விருப்ப மனுவை கட்சியில் உள்ள எவரும் வாங்கலாம்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலர் தி.மு.க.வுக்கு வருவார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஜெயலலிதா இறந்ததும் அ.தி.மு.க. அழிந்துவிடும், ஆட்சி முடிந்துவிடும் என்றார். இரண்டுமே நல்லபடியாக நடந்துகொண்டிருக்கின்றன. எனவே அவர் கூறுவது எப்போதுமே தவறுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.