ராகுலின் பாராட்டுக்கு கண்டம் தெரிவித்த மத்திய அமைச்சர் நிதின்கட்காரி!
பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான நிதின்கட்காரியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புகழ்ந்து நேற்று டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர், “பா.ஜனதா தலைவர்களில் துணிச்சல் மிக்க தலைவர் நிதின்கட்காரிதான்” என்று கூறியிருந்தார்.
அந்த பதிவில் ராகுல் காந்தி மேலும் கூறுகையில், “நாக்பூரில் கட்சி தொண்டர்களை முதலில் குடும்பத்தை கவனிக்க கூறிய மத்திய மந்திரி நிதின்கட்காரியை பாராட்டுகிறேன். அவர் இதோடு நின்று விடக்கூடாது. ரபேல் விவகாரம், விவசாயிகளின் கஷ்டம் மற்றும் சி.பி.ஐ. நடவடிக்கை பற்றியும் பேச வேண்டும்” என்று கூறி இருந்தார்.
மேலும் மற்றொரு பதிவில் வேலைவாய்ப்பு பற்றியும் நிதின்கட்காரி பேச வேண்டும். பா.ஜ.க.வில் அவரிடம் மட்டுமே கொஞ்சம் துணிச்சல் இருக்கிறது என்று கூறியிருந்தார்.
ராகுலின் இந்த டுவிட்டர் பதிவுக்கு நிதின்கட்காரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ராகுல்ஜி, உங்களது சான்றிதழ் எனக்கு தேவை இல்லை. பத்திரிகையில் தவறாக வெளியான ஒரு செய்தியை அடிப்படையாக வைத்துக்கொண்டு நீங்கள் மத்திய அரசை தாக்கி பேசுவது ஆச்சரியமாக உள்ளது.
தலைவர் பொறுப்பில் இருப்பவர்கள் பொறுப்பாக பேச வேண்டும். தலைவராக இருப்பவர் நல்ல புரியும் சக்தி கொண்டவராக திகழ வேண்டும். இது இரண்டும் உங்களிடம் இல்லை.
காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் உள்ள முக்கிய வேறுபாடே அரசியலமைப்பு சட்டத்தில் கொண்டுள்ள நம்பிக்கை தான். காங்கிரசுக்கு அரசியல் சட்டங்களில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. உங்களது செயல்பாடுகளும் அதைத்தான் காட்டுகின்றன.
விவசாயிகள் பிரச்சினையில் நீங்கள் தவறான வழிகாட்டுதல்கள் மேற்கொண்டு இருக்கிறீர்கள். எனவே மீண்டும் மோடி தலைமையில்தான் மத்தியில் ஆட்சி மலரும். நாங்கள் தொடர்ந்து நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வோம்.
எதிர்காலத்திலாவது பொறுப்புடனும், புரிந்துகொள்ளும் தன்மையுடனும் நீங்கள் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். மற்றவர்களின் தோளை பிடித்துக்கொண்டு செயல்படும் நிலையில் இருந்து மாறுங்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.