Tamilசெய்திகள்

வேலைவாய்ப்பை அதிகரிக்க நிறுவனங்கள் கருத்து வழங்க வேண்டும் – முதல்வர் கோரிக்கை

தமிழகத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் கருத்து வழங்க வேண்டும், என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.

பொறியியல் பட்டதாரிகளுக்கான செயல்திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு மேம்படுத்துதல் கலந்தாய்வு கூட்டம், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை-2018 வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகள் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது:

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி. கல்வி நிறுவன வளாகத்தில் திறன்மேம்பாட்டு சிறப்பு பயிற்சி மையமும் மற்றும் 5 பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில் திறன்மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்களும் அரசால் நிறுவப்பட்டுள்ளன.

சீமென்ஸ் மற்றும் டிசைன் டெக் ஆகிய தொழில் நிறுவனங்களுடன் இணைந்து ரூ.546 கோடியே 84 லட்சம் மதிப்பீட்டில் இச்சிறப்பு பயிற்சி மையங்கள் மூலமாக தமிழ்நாட்டில் தொழில்நுட்பக் கல்வி உட்கட்டமைப்பை வலுப்படுத்துதல், தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழில் திறன்களை மாணவர்களிடையே மேம்படுத்துதல், வேலைவாய்ப்பை பெறுதலுக்கான திறனை அதிகரிக்கச் செய்தல், தொழிற்சாலைகளின் தற்கால எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு திறனை மேம்படுத்துதல் ஆகிய முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இத்திட்டத்தின் மூலம் பட்டய மற்றும் பட்ட வகுப்புகளில் பயின்றுவரும் தொழில்நுட்ப மாணவர்களுக்கும் தொழிலகங்களில் இருந்து கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்களுக்கும் திறன்மேம்பாட்டு பயிற்சி அளித்து, அவர்கள் எளிதாக வேலைவாய்ப்பு பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா அறிவித்த அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் 15 நாட்கள் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கும் திட்டத்தின்படி, 2016-17 மற்றும் 2017-18 கல்வியாண்டுகளில் 191 மாணவர்கள், 15 நாட்களுக்கு ஸ்பெயின், தைவான், ஜப்பான், மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப பயிலகங்களில் தொழில்நுட்ப பயிற்சி பெற அனுப்பிவைக்கப்பட்டார்கள்.

இப்பயிற்சிக்காக ஆண்டொன்றிற்கு 100 மாணவர்களுக்கு ரூ.1.5 கோடியை தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த பயிற்சி தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.

தமிழ்நாட்டிலுள்ள 7 கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்ப கல்வி தரமேம்பாட்டுத் திட்டம் – 3 மூலம், இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு வழிகாட்டியாக செயல்பட தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு அக்கல்வி நிறுவனங்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.

புதிய கல்லூரிகளை பின்தங்கிய மாவட்டங்களில் அரசு தொடங்கி வருவதாலும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்வி கட்டண சலுகை வழங்கி வருவதாலும், விலையில்லா மடிக்கணினி, பின்தங்கிய மாணவர்களுக்கான உதவித்தொகை போன்ற எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தியதாலும், தமிழ்நாட்டில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் 48.6 சதவீதம் உயர்ந்துள்ளது. இது தேசிய சேர்க்கை விகிதமான 25.8 சதவீதத்தைவிட உயர்ந்ததாகும்.

தேசிய அளவில் ஆராய்ச்சி படிப்பில் தமிழ்நாடு தான் முதன்மையான இடத்தில் உள்ளது என மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 2017-2018-ம் ஆண்டில் 29,778 ஆராய்ச்சியாளர்கள் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், நிர்வாக மேலாண்மை ஆகிய துறைகளில் பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் பல்வேறு பொறியியல் சார்ந்த துறைகளில் 6,914 மாணவர்கள் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை பயன்படுத்தி தொழிற்சாலைகளுக்கு தேவையான ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளவும், திறன்மேம்பாட்டை வளர்த்துக்கொள்வதற்கும் உரிய உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

இம்மாணவர்களுக்கான பயிற்சியை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. படித்த மாணாக்கர்கள் அனைவருக்கும் அவர்களுடைய தகுதியை மேம்படுத்தவும், அத்தகுதிக்கு உரிய வேலைவாய்ப்பை அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட என்ஜினீயர்களும், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட டிப்ளமோ கல்வி பெற்றவர்களும் வெளியேறுகின்றனர்.

தமிழக அளவிலான வேலைவாய்ப்பு திட்டம் மூலம் அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கேம்பஸ் இண்டர்வியூ நடத்தி வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பை மேலும் அதிகப்படுத்துவதற்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் கருத்துகளை வழங்க வேண்டும்.

உலகளாவிய முதலீட்டாளர் 2-வது மாநாடு வரும் ஜனவரியில் நடைபெற உள்ளது. பல்வேறு துறைகளில் இருந்து முதலீட்டை ஈர்க்க இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இங்கு வந்துள்ள தொழில் அதிபர்கள் அனைவரும் தமிழகத்தில் புதிய முதலீடுகளை செய்து அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்.

இந்த முதலீடுகள் மூலம் தமிழகத்தின் உள்நாட்டு ஒட்டுமொத்த வளர்ச்சி (ஜி.டி.பி.) விரைவாக அதிகரிக்கும். அதன்மூலம் தமிழக மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *