Tamilசெய்திகள்

நீட் தேர்வு எழுதும் தருமபுரி மாணவிக்கு காஷ்மீரில் தேர்வு மையம் – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியா முழுவதும் மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், தருமபுரியைச் சேர்ந்த மாணவிக்கு ஜம்மு-காஷ்மீரில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த மாணவி தருமபுரியிலிருந்து சென்னை வந்து விமானம் மூலம் காஷ்மீர் புறப்பட்டு சென்றிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவின் தென்கோடியில் உள்ள மாணவிக்கு வடகோடியில் தேர்வு மையம் ஒதுக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.

பல முறை சுட்டிக்காட்டியும் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்வதில் நிகழ்ந்த தவறுகளையே சரி செய்ய முடியாத தேசிய தேர்வு வாரியம், முதுநிலை நீட் தேர்வை எவ்வாறு சரியாக நடத்தும்? என்ற வினா எழுகிறது.

இளநிலை நீட் தேர்வாக இருந்தாலும், முதுநிலை நீட் தேர்வாக இருந்தாலும் வினாத்தாள் கசிவு, தேர்வு மைய ஒதுக்கீட்டில் குழப்பம், தேர்வுகளில் முறைகேடு என பல புகார்கள் தொடர்ந்து எழுந்து கொண்டு தான் இருக்கின்றன. அதனால், நீட் தேர்வின் மீதான நம்பகத்தன்மை குறைந்து விட்ட நிலையில் அத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.