Tamilசெய்திகள்

அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்றால் அதிகார மாற்றம் அமைதியாக நடைபெறாது – ஜோ பைடன் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதி நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டுடிரம்ப் (வயது 78) போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அவரை எதிர்த்து ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் (வயது 81) போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தேர்தல் விவாத நிகழ்ச்சியில் டிரம்ப்-ன் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் ஜோ பைடன் திணறினார். வேட்பாளரை மாற்ற கட்சியில் பல தலைவர்கள் போர்க்கொடி துாக்கினர். இதையடுத்து அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்தார்.

இதனையடுத்து, துணை அதிபர் கமலா ஹாரிஸ் (வயது 59) ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒருவேளை ட்ரம்ப் தோல்வியடைந்தால் கமலா ஹாரிஸ்க்கு அதிகார மாற்றம் அமைதியான முறையில் நடைபெறாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

CBS செய்தி தொலைக்காட்சிக்கு அதிபர் ஜோ பைடன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ட்ரம்ப் கூறியதில் அர்த்தம் உள்ளது. அதிபர் தேர்தலில் நாங்கள் தோல்வியடைந்தால் அமெரிக்காவே ரத்த களறியாகும்” என்று தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால் அமெரிக்காவில் ரத்தக் களறி ஏற்படும் என்று கடந்த மார்ச் மாதம் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.