100-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் – ராகுல் காந்தி உறுதி
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். நேற்று இரவு வயநாட்டில் தங்கினார்கள். இன்று காலையில் வயநாட்டில் உள்ள ஒரு ரிசார்ட்டில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
இதில் அகில இந்திய காங்கிரஸ் அமைப்புச் செயலாளர்கே.சி. வேணுகோபால், கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், கேரள எதிர்கட்சி தலைவர் சதீசன், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பி.விஸ்வநாதன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனையின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தெந்த வகைகளில் உதவலாம் என்று விவாதித்தனர். இதையடுத்து காங்கிரஸ் சார்பில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக் கொடுக்க முடிவு செய்தனர்.
ஒரே இடத்தில் இடம் வாங்கி அதில் ஒரு குடியிருப்பு போல் வீடுகளை கட்டவும் ஒவ்வொரு வீடும் தலா ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் செலவில் கட்டவும் திட்டமிட்டுள்ளார்கள். இந்த கூட்டம் முடிந்ததும் ராகுல் காந்தி கலெக்டரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது நிலவரம் மற்றும் மீட்பு பணிகள் பற்றியும் பற்றியும் கேட்டறிந்தார்.
மேலும் காங்கிரஸ் குடும்பத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது பற்றியும் விவாதித்ததாக கூறப்படுகிறது.