நிலச்சரிவுக்கு பிறகே ரெட் அலர்ட் விடப்பட்டது – அமைச்ச அமித்ஷாவுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் பதிலடி
கேரளாவின் வயநாட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200-க்கும் அதிகமானோர் பலியாகினர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கேரளாவில் முழு வீச்சில் மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடலோர காவல் படையினர் உள்பட 1,257 பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் பிரேத பரிசோதனை வேகமாக நடைபெறுகிறது.
நிலச்சரிவில் சிக்கி 5,592 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி 191 பேர் மாயமாகி உள்ளனர். மீட்கப்பட்ட 144 சடலங்களில் 76 ஆண்கள் மற்றும் 64 பெண்களும் உள்ளனர். மீட்கப்பட்ட சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
வயநாட்டில் உள்ள 82 நிவாரண முகாம்களில் 19 கர்ப்பிணி பெண்கள் உட்பட 8,017 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வயநாட்டில் 115-204 மி.மீ மழை பெய்யும் என மத்திய அரசின் வானிலை எச்சரிக்கை விடுத்தது. ஆனால், அடுத்த 48 மணி நேரத்தில் 572 மி.மீ மழை பதிவாகியுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட அன்று ஆரஞ்சு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது. சோகம் நிகழும் முன் ஒருமுறை கூட அப்பகுதியில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. நிலச்சரிவு ஏற்பட்ட பின்னரே அன்று காலை 6 மணிக்கு ரெட் அலர்ட் விடுத்தனர்.
ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சிறிய நிலச்சரிவு அல்லது பாறை வெடிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என இந்திய புவியியல் ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. பருவநிலை மாற்றம் தொடர்பான கடும் சிக்கல்கள் உள்ளன என்பதை மத்திய அரசு உணர வேண்டும். இப்போது நாம் பார்ப்பதுபோல் கடந்த காலங்களில் அதிக மழை பெய்ததை பார்த்திருக்கிறோமா?
காலநிலை மாற்றத்தினை தணிக்கும் முயற்சிகள் தேவை. இதுபோன்ற ஏதாவது இயற்கை பேரிடர் நடந்தால் நீங்கள் மற்றவர்களின் மீது பழியை சுமத்த முயற்சிக்க கூடாது. நான் சொன்னதுபோல் இது பழி போடும் நேரம் இல்லை என தெரிவித்தார்.