அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜர் – விசாரணை தள்ளி வைப்பு
கடந்த 2018-ம் ஆண்டு கா்நாடக சட்டசபைத் தோ்தல் பிரசாரத்தின்போது அமித்ஷா கொலை வழக்கின் குற்றவாளி என ராகுல் காந்தி கருத்து தெரிவித்தாா். இதையடுத்து ராகுல் காந்தி மீது உத்தரபிரதேச மாநில பா.ஜனதா தலைவர் விஜய் மிஸ்ரா, சுல்தான்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது.
அப்போது, உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை மேற்கொண்டிருந்த ராகுல், அந்தப் பயணத்தை நிறுத்திவிட்டு கடந்த பிப்ரவரி 20-ந் தேதி சுல்தான்பூா் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோர்ட்டில் நேரில் ஆஜரானாா். அதைத் தொடா்ந்து அவருக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கிடையே இன்று (ஜூலை 26-ந்தேதி) விசாரணைக்கு வரும்போது ராகுல்காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா். அதன்படி எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோர்ட்டில் ஆஜரானார்.
விசாரணைக்கு பின்னர் இவ்வழக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்று ராகுல்காந்தி மீண்டும் கோர்ட்டில் ஆஜராகத் தேவையில்லை என்று கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.