Tamilவிளையாட்டு

கிறிஸ்டியானோ ரொனால்டோவில் 24 வருட சாதனையை முறியடித்த துருக்கி வீரர் அர்டா குலெர்

யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. ஒவ்வொரு போட்டியிலும் எதிர்பாரா திருப்பங்கள் மற்றும் சுவாரஸ்யங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், க்ரூப் எஃப் பிரிவில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் துருக்கி மற்றும் ஜார்ஜியா அணிகள் மோதின.

இந்த போட்டியில் இளம் வீரர் அர்டா குலெர் லாங் ரேஞ்சில் இருந்து அடித்த கோல் துருக்கி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. போட்டி முழுக்க ஆதிக்கம் செலுத்திய துருக்கி அணி கோல் அடிப்பதில் தீவிரம் காட்டியது.  இதற்கு பலன் அளிக்கும் வகையில், போட்டியின் 25-வது நிமிடத்தில் துருக்கியின் மெர்ட் முல்துர் வேகமாக அடித்த ஷாட் கோலாக மாறியது. மேலும், போட்டியில் துருக்கி அணிக்கு முன்னிலையை பெற்றுக் கொடுத்தது.

மறுபுறம் ஜார்ஜியா வீரர்கள் விட்டுக்கொடுக்காமல் ஆடினர். இதன் காரணமாக ஜார்ஜியா அணி போட்டியன் 32-வது நிமிடத்தில் கோல் அடித்தது. இதையடுத்து போட்டியில் இரு அணிகளும் ஒரு கோல் அடித்த சமனில் இருந்தன. போட்டியின் இரண்டாம் பாதி எந்த அணி இன்னொரு கோல் அடித்து வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புடன் துவங்கியது. இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதில் தீவிரம் காட்டினர். முடிந்த வரை போட்டியில் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த துருக்கி வீரர்கள், இடையில் கிடைத்த வாய்ப்புகளை கோலாக மாற்றும் முயற்சியிலும் இறங்கினர்.

அந்த வகையில், போட்டியின் 65-வது நிமிடத்தில் துருக்கி அணிக்காக களமிறங்கிய 19 வயது இளம் வீரர் அர்டா குலெர் யாரும் எதிர்பாரா நிலையில் கோல் அடித்தார். இதன் மூலம் துருக்கி அணி 2-1 என்ற வகையில் போட்டியில் முன்னிலை பெற்றது. போட்டி முடிவில் துருக்கி அணி 3 கோல்களை அடித்து இருந்தது. இதன் மூலம் இந்த போட்டியில் துருக்கி அணி 3-1 என்ற வகையில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் துருக்கி வீரர் அர்டா குலெர் கோல் அடித்ததன் மூலம் யூரோ கோப்பையில் சாதனை ஒன்றை படைத்துள்ளார். யூரோ கால்பந்து வரலாற்றின் அறிமுக போட்டியில் முதல் கோல் அடித்த இளம் வீரர் என்ற சாதனையை அர்டா குலெர் பெற்றிருக்கிறார்.

முன்னதாக 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 19 வயது 128 நாளில் முதல் கோல் அடித்தது சாதனையாக இருந்தது. நேற்றைய போட்டியில் கோல் அடித்த அர்டா குலெர் தனது 19 வது 114-வது நாளில் கோல் அடித்து சாதனை படைத்துள்ளார்.