Tamilசெய்திகள்

பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை பிடிபட்டது – அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது

திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று நேற்று மாலை திடீரென நுழைந்தது. இதை பார்த்ததும் மாணவ- மாணவிகள் அச்சம் அடைந்தனர். உடனே பள்ளி நிர்வாகம் மாணவிகளை உடனடியாக பள்ளியில் இருந்து பத்திரமாக வெளியேற்றினர்.

அதற்குள் அந்த சிறுத்தை அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அப்போது ஒரு நபரை தாக்கியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அந்த சிறுத்தை மரங்கள் அடர்ந்த பகுதியில் புகுந்து மறைந்துள்ளது. சிறுத்தை மறைந்துள்ள பகுதியில் இரண்டு கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

கார் நிறுத்தத்தில் பதுங்கி உள்ள சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர், தீயணைப்பு துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் ஈடுபட்டனர். கார் ஷெட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை சாலைப்பகுதிக்கு தாவ முயன்றது. அப்போது வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்தனர். பிடிபட்ட சிறுத்தையை வனத்திற்குள் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

திருப்பத்தூரில் பெரும் பீதியை ஏற்படுத்திய சிறுத்தை 10 மணி நேர போராட்டத்திற்கு பின் சிக்கியதால் தற்போது மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இதை தொடர்ந்து, மயக்க ஊசி செலுத்தி பிடிபட்ட சிறுத்தையானது பத்திரமாக அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. கூண்டை திறந்தவுடன் சிறுத்தை சீறி பாய்ந்து வனப்பகுதியில் ஓடியது.