Tamilசெய்திகள்

இஸ்ரேல் உடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை கிடையாது – ஹமாஸ் அறிவிப்பு

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. ஐ.நா. சர்வதேச நீதிமன்றம் ரஃபா மீது தாக்குதல் நடத்த தடைவிதித்துள்ளது.

இதற்கிடையே நேற்றுமுன்தினம் இஸ்ரேல் ரஃபா நகர் மீது வான்தாக்குதல் நடத்தியது. அப்போது ரஃபா நகரில் உள்ள முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 35 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதற்கு பெரும்பாலான நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, இந்த தாக்குதல் துரதிருஷ்டவசமான தவறு. இஸ்ரேல் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ரஃபா மீது தாக்குல் நடத்திய நிலையில் இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை கிடையாது என ஹமாஸ் தெரிவித்துள்ளது. காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைத்திடவும், ஹமாஸ் பிடித்துச் சென்ற பிணைக்கைதிகளை விடுவிக்கவும் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் தேவை என அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருவதுடன், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

அமெரிக்கா, எகிப்து, கத்தார் முயற்சியால் கடுமையான சண்டை நடைபெற்றபோது ஒரு வாரம் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதேபோல் இஸ்ரேல் சிறையில் இருந்து பாலஸ்தீனர்கள் பலர் விடுவிக்கப்பட்டனர்.