Tamilசெய்திகள்

வெள்ளியங்கிரி மலைக்கு மக்கள் வரவேண்டாம் – வனத்துறை அறிவுறுத்தல்

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூண்டியில் பிரசித்திபெற்ற வெள்ளியங்கிரி மலை அமைந்து உள்ளது. இங்குள்ள 7-வது மலையில் சுயம்புவடிவில் வெள்ளியங்கிரி ஆண்டவர் அருள்பாலித்து வருகிறார். பூலோகத்தின் தென்கயிலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல வேண்டுமெனில், சுமார் 5.5 கி.மீ. தொலைவுக்கு நீண்ட மலைப்பாதை வழியாக சென்று வழியிலுள்ள வெள்ளை விநாயகர் கோவில், பாம்பாட்டி சனை, கைதட்டி சனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற மலைகளை கடந்தால் 7-வது மலையில் வீற்றிருக்கும் சுயம்புலிங்க பெருமானை தரிசிக்க முடியும். மேலும் இந்த மலைப்பாதை பயணம் என்பது மிகவும் கரடு-முரடானது.

வெள்ளியங்கிரி மலைப்பாதையில் பக்தர்கள் ஏறுவதற்கு வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம்வரை அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி இந்தாண்டு கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி முதல் மலையேற பக்தர்களுக்கு வனத்துறை அனுமதியளித்து உள்ளது. இதனால் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் அதிகளவு பக்தர்களும், மற்ற நாட்களில் குறைந்த பக்தர்களும் மலையேற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக 5,6,7-வது மலையில் அடிக்கடி காலநிலை மாற்றம் ஏற்பட்டு காற்றுடன் கூடிய மழை பெய்வதால் அங்கு கடும் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது.

வெள்ளியங்கிரி மலையில் நேற்று சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் அங்கு பக்தர்கள் நடந்து செல்லும் பாதைகள் சிதலமடைந்து உள்ளன. தொடர்ந்து வெள்ளியங்கிரி மலையில் காலநிலை மாற்றம் காரணமாக அடிக்கடி மழை பெய்து வருவதாலும், கடும் குளிர் நிலவி வருவதாலும், வெள்ளியங்கிரி மலையேறுவதற்கு பக்தர்கள் வரவேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.