Tamilசெய்திகள்

வேங்கை வயல் விவகார்ம – 3 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்படுகிறது

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான சாட்சியங்களைச் சமர்ப்பிக்க வேண்டி உள்ளதால், குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர்.

சம்பவம் நடந்தபோது வாட்ஸ் அப் இல் பகிரப்பட்ட ஆடியோக்களின் அடிப்படையில், இந்த குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாகவும், இதன் முடிவுகள் வரும் பட்சத்தில் இந்த வழக்கு அடுத்த கட்டத்திற்குச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் கருதப்படுகிறது.

இதனையடுத்து 3 பேருக்குக்குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி சி.பி.சி.ஐ.டி போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் கோர்ட்டில் ஆஜரான 3 பேர்களுக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்த உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் 3 பேருக்கு குரல் மாதிரி சோதனை நடைபெறுகிறது.