கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? – காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சவால்
கோவை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக கோவை கணபதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ ப்பெருந்தகை எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசியதாவது:-
இந்தியா கூட்டணிக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எழுச்சியோடு வாக்களிக்க மக்கள் தயாராகி ட்டனர். பிரதமர் மோடி தேர்தல் அறிக்கையில் சொன்ன எந்த வாக்குறுதியையுமே நிறைவேற்றவில்லை. ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் சொன்னதில் 80 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார்.
தற்போது நாட்டில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளது. அந்த போதைப்பொருள்கள் குஜராத்தில் உள்ள 2 துறைமுகங்களில் இருந்து தான் வருகிறது. அந்த துறை முகத்தை நடத்துவது யாரென பிரதமர் மோடிக்கு தெரியாதா? இந்த நாட்டை குட்டிச்சுவராக்க பா.ஜனதா துடித்துக்கொண்டு இருக்கிறது.
இந்த தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை எது சொன்னாலும் பொய் தான். தற்போது பிரதமர் மோடியும், அண்ணாமலையும் கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசி வருகின்றனர். இந்திராகாந்தி தேசநலனுக்காகவும், நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் வாழ்ந்தவர். அவரை பிரதமர் மோடியும், அண்ணாமலையும் கிண்டல் செய்கின்றனர்.
வெஜ் பேங் என்ற ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என அண்ணாமலை படித்து தெரிந்து கொள்ளட்டும். 1976-ம்ஆண்டு மார்ச் 23-ந்தேதி கச்சத்தீவுக்கு ஒரு ஒப்பந்தம். வெஜ் பேங்குக்கு ஒரு ஒப்பந்தம் என்று 2 ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது. அந்த ஒப்பந்தம் பற்றி தெரிந்து கொண்டு அண்ணாமலை பேச வேண்டும்.
அதுதொடர்பாக என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? இந்திராகாந்தி போட்ட அந்த ஒப்பந்தத்தின்படி தான் கன்னியாகுமரியில் இருந்து 50 நாட்டிக்கல் மைல் தூரத்திலும், கொழும்புவில் இருந்து 150 நாட்டிக்கல் மைல் தூரத்திலும் உள்ள இந்திய எல்லையில், உலகத்தில் இல்லாத அளவுக்கு கனிம வளங்கள், கடல் வளங்கள் கடலுக்கு அடியில் இருக்கிறது என்று கண்டுபிடித்து சொல்லி இருக்கிறார்கள். எனவே அண்ணாமலை கச்சத்தீவு-வெஜ்பேங் ஒப்பந்தம் குறித்து தெரியாமல் எதுவும் பேசக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.