Tamilசெய்திகள்

தமிழ்நாட்டில் உள்ள 168 ரெயில் நிலையங்களில் உள்நாட்டு பொருட்கள் விற்பனை தொடக்கம்

தெற்கு ரெயில்வேயில் பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். திண்டுக்கல், ஈரோடு, திருச்சி, பாலக்காடு ரெயில் நிலையங்களில் அமைக்கப் பட்டுள்ள மலிவு விலை மருந்தகங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

அதே போல தமிழகத்தில் 168 ரெயில் நிலையங்களில் ‘ஒரு நிலையம் ஒரு பொருள்’ விற்பனை அரங்குகள் திறக்கப்பட்டன. உள்ளூர் பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களில் முக்கிய விளைபொருட்களை ரெயில் பயணிகளுக்கு தரமாகவும் குறைவான விலையில் கிடைக்கும் வகையிலும் இந்த கடைகள் செயல்படும்.

சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. ரெயில் நிலையங்களில் அந்த பகுதியில் உள்ள முக்கியமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. இதற்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று மேலும் பல ரெயில் நிலையங்களில் ஒரு பொருள் அங்காடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தெற்கு ரெயில்வேயில் அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் சாதாரண ரெயில் பெட்டிகள் முழுமையாக நீக்கப்பட்டு அனைத்தும் நவீன பெட்டிகளாக மாற்றப்படுகிறது. சென்னை-கடற்கரை-எழும்பூர் 4-வது ரெயில் பாதை பணிகள் ஜூன் மாதத்தில் முடிவடையும். அதன் பின்னர் கடற்கரை-வேளச்சேரி வரை மின்சார ரெயில் சேவை தொடங்குகிறது.

சென்னை புறநகர் ரெயில் சேவையில் குளிர்சாதன பெட்டிகள் பொருத்தப்பட உள்ளன. முதல்கட்டமாக 2 புறநகர் ரெயில்கள் மே மாதம் முதல் இயக்கப்படுகிறது என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.