Tamilசெய்திகள்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 9.25 லட்சம் மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள்

தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அடுத்தடுத்து தொடங்கி நடைபெற உள்ளது. பிளஸ்-2 தேர்வு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9.25 லட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள். தமிழகத்தில் 3302 மையங்களில் தேர்வை நடத்த அரசு தேர்வுத்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசியாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகள் முறைகேட்டில் ஈடுபடாமல் தவிர்க்க 3200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. தேர்வு கூடங்களில் காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள்களை மாற்றுதல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

1-ந்தேதி தொடங்கும் பிளஸ்-2 தேர்வு 22-ந்தேதி வரை நடைபெறுகிறது. முதலில் தமிழ் தேர்வும் அதனை தொடர்ந்து 5-ந்தேதி ஆங்கிலம், 8-ந்தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ் தமிழ், ஹோம் சயின்ஸ், புள்ளியியல் ஆகிய பாடப்பிரிவுகள், 11-ந்தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், 15-ந்தேதி இயற்பியல், பொருளியல், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, 19-ந்தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், 22-ந் தேதி பயாலஜி, தாவரவியல், வரலாறு உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு தேர்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் 3, 4 நாட்கள் இடைவெளி உள்ளது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் பதட்டம் அடையாமல் தேர்வு எழுதுவதற்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. வினாத்தாள்கள் கட்டுகாப்பு மையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். ஒவ்வொரு நாளும் தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்களை பாதுகாப்பாக விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.