சபரிமலைக்கு செல்வேன் என்று கூறிய பெண் சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல்
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் உள்ளன. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை புனேயை சேர்ந்த பெண் ஆர்வலர் திப்தி தேசாய் வரவேற்றார். சம உரிமைக்காக போராடி வரும் அவர் சபரிமலை கோவிலுக்கு தான் செல்ல போவதாகவும் அறிவித்தார்.
இந்தநிலையில் திப்தி தேசாய்க்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. அவருக்கு 200-க்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்துள்ளன. அதில் சிலவற்றில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அவரது பேஸ்புக் பக்கத்திலும் மிரட்டல் வந்துள்ளது. அதில் சபரிமலை கோவிலுக்கு சென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டி உள்ளனர். இதுபற்றி திப்தி தேசாய் கூறியதாவது:-
நான் சபரிமலை கோவிலுக்கு செல்வேன் என்று அறிவித்தது முதல் எனக்கு கொலை மிரட்டல் வருகின்றன. மேலும் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் எனது புகைபடத்தை போலியாக சித்தரித்து வெளியிட்டுள்ளார்கள்.
கடந்த காலங்களில் எனக்கு மிரட்டல்கள் வந்துள்ளன. இந்த முறை இடைவிடாது அருவருக்கத்தக்க வகையில் அவதுறுகள் வருகின்றன என்றார்.