Tamilவிளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட் போட்டி – இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் சோயிப் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லீ 3 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் சுழலில் 53.5 ஓவர்களில் 145 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அந்த அணி கடைசி 35 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை தாரைவார்த்தது கவனிக்கத்தக்கது. இந்திய தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும் சாய்த்தனர்.

இதன் மூலம் இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன் எடுத்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மா 24 ரன்னுடனும் (27 பந்து, 4 பவுண்டரி), ஜெய்ஸ்வால் 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் 4-வது நாள் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஜெய்ஸ்வால் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ரோகித் அரை சதம் அடித்து அவுட் (55) ஆனார். அடுத்து வந்த பட்டிதார் 6 பந்துகளை சந்தித்து 0 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து வந்த ஜடேஜா 4 ரன்னிலும் சர்ப்ராஸ் கான் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 120 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து கில்- துருவ் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய கில் அரை சதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இங்கிலாந்து தரப்பில் பஷிர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது.