உதயம் திரையரங்கம் இடிப்பு! – புதிய கட்டுமானம் விரைவில் தொடங்கப்பட உள்ளது
90களின் இறுதி வரை பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு சாதனமாக இருந்தவை திரையரங்குகளும், தொலைக்காட்சியும் மட்டுமே. ஒரே வளாகத்தில், 1 திரையரங்கமும், ஒன்றுக்கும் மேற்பட்ட 2, 3, 4 திரையரங்குகளும் 4 காட்சிகளுடன் மக்களை மகிழ்வித்தன.
சென்னை மக்களுக்கு, அலங்கார் எனும் 1 திரையரங்கம்; ஆனந்த், லிட்டில் ஆனந்த் மற்றும் ஈகா, அனுஈகா எனும் 2 திரையரங்கங்கள்; சத்யம், சுபம், சாந்தம் எனும் 3 திரையரங்கங்கள்; தேவி, தேவிபாலா, தேவிகலா, தேவி பாரடைஸ் என 4 திரையரங்கங்கள் என புதிய திரைப்படங்கள் வெளிவரும் போதெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் இடங்களாக அரங்கங்கள் காட்சியளித்ததை இன்றளவும் சினிமா ரசிகர்கள் நினைவு கூர்கின்றனர்.
இப்பட்டியலில் தென் சென்னை மக்களின் விருப்பமான திரையரங்கு வளாகமாக அசோக் நகரில், அசோக் பில்லருக்கு அருகே “உதயம் காம்ப்ளெக்ஸ்” எனும் பெயரில் உதயம், சந்திரன், சூரியன் என ஒரே வளாகத்தில் அமைக்கப்பட்ட 3-அரங்க காம்ப்ளெக்ஸ் விளங்கியது. பல வருடங்களுக்கு பிறகு “மினி உதயம்” என சிறிய திரையரங்கம் ஒன்றும் அதில் உருவாக்கப்பட்டது.
ஆனால், கடந்த 15 வருடங்களாக, காலத்தை வென்ற திரைப்படங்களை திரையிட்ட அரங்குகளுக்கு “மல்டிப்ளெக்ஸ்” வடிவ திரையரங்குகள் கடும் போட்டியை கொடுத்து வருகின்றன. வர்த்தக ரீதியாக 80களிலும் 90களிலும் ஈட்டிய வருவாயை மீண்டும் எட்ட முடியாமல், அதிகரிக்கும் பராமரிப்பு செலவு மற்றும் பணியாட்கள் ஊதியம், வரிகள், மின்சார கட்டணம் என பல்வேறு செலவினங்களை சமாளிக்க முடியாமல், பல திரையரங்கங்கள், வணிக வளாகங்களாகவும், அபார்ட்மென்ட்களாகவும் உருமாறின. இதில், தற்போது “உதயம் காம்ப்ளெக்ஸ்” இணைந்துள்ளது.
உதயம் திரையரங்க உரிமையாளர்கள், சென்னையின் முன்னணி கட்டுமான நிறுவனம் (காஸா கிராண்ட்) ஒன்றுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, “உதயம் காம்ப்ளெக்ஸ்” முற்றிலும் இடிக்கப்பட்டு அங்கு புதிய கட்டிடம் அமையவுள்ளது.
அங்கு ஒரு புதிய குடியிருப்பு வளாகம் மற்றும் அலுவலக வளாகம் வரவுள்ளதாக தெரிகிறது.
1983ல் திறக்கப்பட்ட “உதயம் காம்ப்ளெக்ஸ்” 40 வருடங்களாக மக்கள் நினைவில் நிற்கும் ஒரு முக்கிய இடமாகும். தாராளமான இரு சக்கர வாகன நிறுத்துமிடம், முன் பக்கம் பெரிய காலி இடம், அரங்க வாயிலில் அமர்ந்து கொள்ள பல படிகள் என பல வசதிகள் இருந்ததால், பொதுமக்களுக்கு – குறிப்பாக இளைஞர்களுக்கு – விருப்பமான திரையரங்க வளாகமாக “உதயம் காம்ப்ளெக்ஸ்” இருந்தது. 62 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்த கட்டிடத்திற்கு 15 பேர் பங்குதாரர்கள் என கூறப்படுகிறது.