எக்ஸ்போசாட் மூலம் விண்மீன் மண்டலத்தின் தரவுகள் சேகரிப்பு – இஸ்ரோ அறிவிப்பு
விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான `நெபுலா’ உள்ளிட்டவற்றை ஆராய, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) திட்டமிட்டு இருந்தது. இதற்காக ‘எக்ஸ்போசாட்’ என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து இருந்தது.
இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, கடந்த மாதம் 1-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் மூலம் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் புவி வட்டப்பாதையில் செயற்கைகோள் நிலை நிறுத்தப்பட்டது. அதில் இருந்து தற்போது விண்வெளி தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, ‘இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்ட ‘எக்ஸ்போசாட்’ செயற்கைகோள், பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி சுற்றுப்பாதையில் இயங்கி வருகிறது. இதில் இந்திய எக்ஸ்ரே ‘போலரிமீட்டர்’ (போலிக்ஸ்) மற்றும் எக்ஸ்ரே ‘ஸ்பெக்ட்ரோஸ்கோபி’ ஆகிய 2 கருவிகள் உள்ளன.
இதில் போலரி மீட்டர் அறிவியல் ஆய்வுகளை தொடங்கி உள்ளது. குறிப்பாக ‘போலிக்ஸ்’ என்ற கருவி வாயுக்களில் உள்ள மேகக்கூட்டங்கள் குறித்து ஆய்வு செய்து விண்மீன் மண்டலத்தில் உள்ள தரவுகள், புகைப்படங்களை சேகரித்துள்ளது.
எக்ஸ்போசாட் செயற்கைகோளை பயன்படுத்தி பெறப்பட்ட தரவு மற்றும் அளவீடுகள் மிகவும் பிரகாசமான விண்வெளி பொருட்களைப் படிக்க பயன்படுத்தப்படும். அத்துடன் எக்ஸ்ரே துருவமுனைப்பு துறையில் அடித்தளத்தை அமைக்கும்.
அதே நேரம் ‘ஸ்பெக்ட்ரோஸ்கோபி’ கருவி விரைவில் பணியை தொடங்கும் வகையில் விஞ்ஞான செயல்பாடுகளுக்கு இப்போது தயாராக உள்ளது. போலிக்ஸ் கருவி பெங்களூருவில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள எக்ஸ்ரே வானியல் ஆய்வகத்தால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இந்த கருவியானது இந்திய தொழில்துறையின் ஆதரவுடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது’ என்றனர்.