ரஞ்சி கோப்பை கிரிக்கெட் – திரிபுரா அணியை 35 ரன்னில் சுருட்டிய ராஜஸ்தான்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் திரிபுரா – ராஜஸ்தான் இடையிலான ஆட்டம் அகர்தலாவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற திரிபுரா பேட்டிங் தேர்வு செய்தது.
ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திரபுரா பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 18.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 35 ரன்னில் சுருண்டது.
9-வது வீரராக களம் இறங்கிய நீலம்புஜ் வட்ஸ் 11 ரன்கள் எடுத்து ஆட்மிழக்காமல் இருந்தார். இதுதான் அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். தொடக்க வீரர் பனிக் 8 ரன்களும், 6-வது வீரராக களம் இறங்கிய சென் 6 ரன்களும் அடித்தனர். அதன்பின் எக்ஸ்ட்ரா மூலம் கிடைத்த 6 ரன்களே இரண்டாவது அதிகபட்ச ரன்னாகும். 6 பேட்ஸ்மேன்கள் டக்அவுட் ஆனார்கள். ராஜஸ்தான் சார்பில் சவுத்ரி 5 விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து ராஜஸ்தான் களம் இறங்கியது. ராஜஸ்தான் அணியும் தடுமாறியது. கடைநிலை வீரர்கள் தங்களுடைய பங்கிற்கு ஓரளவு ரன்கள் திரட்ட 218 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.
பின்னர் 183 ரன்கள் பின்தங்கிய நிலையில் திரிபுரா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது. இன்று ஒரே நாளில் 20 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டன.