மிட்செல் ஸ்டார்க்குக்கு ஆதரவாக பேசும் விராட் கோலி!
ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றியது. இத்தொடர் தொடங்குவதற்கு முன் வார்னர் மற்றும் ஸ்மித் இல்லாத ஆஸ்திரேலியா பேட்டிங்கில் திணறும். ஆனால், பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹசில்வுட், நாதன் லயன் ஆகிய உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்டிங்கை சீர்குலைப்பார்கள். இதனால் ஆஸ்திரேலியா தொடரை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர்கள் கருத்துக் கூறினார்கள்.
ஆனால் மிட்செல் ஸ்டார்க் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சிட்னி டெஸ்டில் ஒரு மெய்டன் ஓவர் கூட வீச முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது. 7 இன்னிங்சில் 13 விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தினார். இதனால அவர் மீது ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்கள் விமர்சனம் வைத்தனர். இந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஸ்டார்க் மீதான விமர்சனம் அதிர்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் “ஸ்டார்க் மிகவும் திறமை வாய்ந்த பந்து வீச்சாளர். அவர் சரியான மனநிலையை பெற்றுள்ளார். தற்போது வரை அவர் ஆஸ்திரேலியாவின் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார். அவரை நோக்கி சிறிய அளவிலாள விமர்சனம் வைக்கப்படுவது எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது.
அவர் உங்களுடைய நம்பர் ஒன் பந்து வீச்சாளராக இருந்தால், அவருக்கு கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும். அவர் மீது நெருக்கடியை திணிக்கக்கூடாது. ஏனென்றால், திறமையான மற்றும் வெற்றியை தேடிக்கொடுக்கக் கூடிய இதுபோன்ற பந்து வீச்சாளர்களை நீங்கள் இழக்க விரும்பமாட்டீர்கள்.” என்றார்.