தேசிய ஹாக்கி போட்டி! – குஜராத்தை வீழ்த்தி மத்திய செயலக அணி வெற்றி
ஹாக்கி இந்தியா அமைப்பின் தமிழ்நாடு பிரிவு சார்பில் 9-வது தேசிய ஹாக்கி (பி பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் ஐ.சி.எப். மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 41 அணிகள் கலந்து கொண்டுள்ளன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.
மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்த தொடக்க விழாவில் தமிழ்நாடு கூடைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஆதவா அர்ஜூனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு ஹாக்கி பிரிவு தலைவர் சேகர் மனோகரன், பொதுச்செயலாளர் ரேணுகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எழும்பூரில் நடந்த சாஷ்த்ரா சீமா பால்-மணிப்பூர் அணிகள் இடையிலான ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. முன்னதாக நடந்த ஆட்டங்களில் மத்திய பிரதேச ஹாக்கி அகாடமி அணி 9-0 என்ற கோல் கணக்கில் பீகாரையும், தெலுங்கானா அணி 5-3 என்ற கோல் கணக்கில் உத்தரகாண்ட் அணியையும், ஜார்கண்ட் அணி 6-2 என்ற கோல் கணக்கில் ஐம்மு-காஷ்மீர் அணியையும் தோற்கடித்தன. ஐ.சி.எப். ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டங்களில் மத்திய செயலக அணி 20-0 என்ற கோல் கணக்கில் குஜராத்தையும், பெங்களூரு அணி 20-1 என்ற கோல் கணக்கில் திரிபுராவையும் விரட்டி அடித்தன.