Tamilசெய்திகள்

பா.ஜ.க அரசு இந்துக்களை பாதுகாக்கவில்லை – கனிமொழி எம்.பி தாக்கு

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் உடன்குடி பஜாரில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார்.

உடன்குடி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், யூனியன் தலைவருமான பாலசிங் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், பாராளுமன்ற குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு பேசியதாவது:-

இந்தியாவில் உள்ள மக்கள் ஜாதி, மதத்தை மறந்து அனைவரும் சகோதர மனப்பான்மையுடன் வாழ்ந்து வருகிறோம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து உதவிக்கரம் நீட்டி ஒற்றுமையாக வாழ்கிறோம். ஆனால் பா.ஜனதா அரசு இந்துக்களை பாதுகாக்கவில்லை. இந்திய மக்களை பிரிக்கிறார்கள். இந்துக்களை அரசியல் கேடயமாக பயன்படுத்துகிறார்கள்.

விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட திட்டங்களை கொண்டு வருகிறார்கள். அரசு நிறுவனங்களை தனியார் நிறுவனங்களாக மாற்ற முயற்சி செய்கிறார்கள். மாநில உரிமைகளை கொஞ்சம், கொஞ்சமாக பறிக்கிறார்கள். மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் காணாமல் போய்விடும். மதத்தை வைத்து அனை வரையும் பிரித்து விடுவார்கள். தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம், பெண்களும் அர்ச்சகராகலாம் என்று ஆணையிட்டு அதை செயல்படுத்தி வருகிறார் நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

அனைத்து தரப்பு மக்களை அரவணைத்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.