வீட்டு வேலை செய்ய வந்தவர்கள் தமிழகத்தை ஆள நினைப்பது தவறு – அமைச்சர் சி.வி.சண்முகம்
திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 3-ந்தேதி வேட்புமனுதாக்கல் தொடங்கியது. 10-ந் தேதி வேட்பு மனுதாக்கல் கடைசி நாளாகும். பலர் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் திருவாரூர்தொகுதி இடைத்தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இன்று காலை அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பொங்கல் பரிசு வழங்க சென்றார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்வியும், அவர் அதற்கு அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: திருவாரூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதே?
பதில்: திருவாரூர் கஜா புயலால் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. அங்கு சகஜநிலை திரும்பியபிறகு தேர்தல் நடந்தால் நல்லதுதான்.
திருவாரூரில் எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது.
கேள்வி: பாராளுமன்ற தேர்தலோடு சேர்த்து இடைத்தேர்தல் நடக்குமா?
பதில்: அவ்வாறு நடந்தாலும் நல்லதுதான்.
கேள்வி: ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தீர்களே?
பதில்: அம்மாவின் மரணம் குறித்து பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் அ.தி.மு.க. தொண்டன் என்ற முறையில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருந்தேன். ஆனால் அதற்கு பதில் சொல்ல முடியாதவர்கள் அமைச்சர்களை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று மிரட்டும் தொனியில் பேசி வருகின்றனர்.
இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் எதனை பற்றியும் கேட்கும் உரிமை உண்டு. இது பெரியார் பிறந்த மண். இது ஹிட்லர் நாடு அல்ல.
ஆனால் தேவையின்றி அமைச்சர்களை கட்டுப்படுத்துங்கள் என்று பேசுவது தவறு. அம்மா வீட்டுக்கு வேலை செய்ய வந்தவர்கள், அம்மா மரணத்துக்கு காரணமான தினகரன் குடும்பத்தினர் இன்று வாய்க்கு வந்ததை பேசி வருகின்றனர்.
தினகரன் உல்லாச விடுதியில் இருந்து போதையில் பேசுவதுபோல் பேசி வருகின்றார். அம்மா வீட்டிற்கு வேலை செய்ய வந்தவர்கள் தமிழகத்தை ஆளவேண்டும் என்று நினைப்பது தவறு. தினகரன் இதோடு நிறுத்தி கொள்ளவேண்டும்.
அதுபோலவே அ.தி.மு.க. தொண்டன் என்ற முறையில் எனக்கு தோன்றிய சந்தேகங்களை தெரிவித்திருந்தேன். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தினர் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.