ஓய்வு பெறுவதாக வெளியான செய்தி தவறானது – மேரி கோம் விளக்கம்
இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கனையான மேரிகோம் 6 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற மேரிகோம் டோக்கியோ ஒலிம்பிக்கில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி கண்டு வெளியேறிய பிறகு எந்தவொரு போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. 2022-ம் ஆண்டு காமன்வெல்த் தகுதி போட்டிக்கு முன்பாக கால் முட்டியில் காயம் அடைந்து அறுவை சிகிச்சை செய்த அவர் களம் திரும்பவில்லை.
இந்த நிலையில் 41 வயதான மேரிகோம் குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்று செய்தி வெளியானது. 40 வயதுக்கு மேல் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க முடியாது என்பதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டிருந்தது. இதனை மேரிகோம் மறுத்துள்ளார்.
இது குறித்து மேரிகோம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘நான் ஓய்வு பெறுவதாக இன்னும் அறிவிக்கவில்லை. ஓய்வு பெறுவதாக வெளியான செய்தி தவறானது. திப்ருகாரில் (அசாம்) கடந்த புதன்கிழமை நடந்த பள்ளி விழாவில் கலந்து கொண்டு சிறுவர்களை ஊக்கப்படுத்தினேன். நான் இன்னும் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற வேட்கையுடன் தான் இருக்கிறேன். ஆனால் வயது கட்டுப்பாடு காரணமாக என்னால் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாது. ஆனால் என்னால் விளையாட்டை தொடர முடியும். நான் இன்னும் எனது உடல் தகுதியில் கவனம் செலுத்தி வருகிறேன். ஓய்வு பெற முடிவு செய்யும் போது முறைப்படி அறிவிப்பேன்’ என்றார்.