Tamilவிளையாட்டு

பாஸ்பால் கிரிக்கெட்டை இந்தியாவில் செயல்படுத்த இங்கிலாந்து முயற்சிக்கும் – அலைஸ்டர் குக் கருத்து

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 25-ந்தேதி ஐதராபாத்தில் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடருக்கான இங்கிலாந்து அணி நேற்று நள்ளிரவு ஐதராபாத் வந்தடைந்தது.

இங்கிலாந்து அணி பிரத்யேகமாக பயிற்சி ஆட்டம் எதிலும் விளையாடவில்லை. வலைப்பயிற்சி மேற்கொண்டு நேரடியாக டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. நியூசிலாந்து அணியின் முன்னாள் அதிரடி வீரர் பிரெண்டன் மெக்கல்லாம் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டதில் இருந்து, இங்கிலாந்து பாஸ்பால் முறையை டெஸ்ட் கிரிக்கெட்டில் கையாண்டு வருகிறது.

பாஸ்பால் என்றால் அச்சமின்றி முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக விளையாட வேண்டும் என்பதுதான். இந்தியாவுக்கு எதிராக எப்போதுமே சிறப்பாக விளையாடி இங்கிலாந்து வீரர்களில் ஒருவர் அலைஸ்டர் குக். இந்திய மண்ணில் பாஸ்பால் ஆட்டம் இங்கிலாந்துக்கு கைக்கொடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா- இங்கிலாந்து தொடர் குறித்து அலைஸ்டர் குக் கூறியதாவது:-

இங்கிலாந்து அணியின் பிரச்சனை என்னவென்றால், போட்டிக்காக தயாராகுவதில் உள்ள குறைபாடுதான். பயிற்சி ஆட்டம் இல்லாமல் களம் இறங்குவது, நவீன சுற்றுப் பயணத்தின் இயல்புதான். 2012-ல் நாங்கள் இந்தியாவில் தொடரை வென்றபோது, நாங்கள் சிறந்த எதிரணிக்கு எதிராக மூன்று பயிற்சி ஆடடத்தில் விளையாடினோம்.

யுவராஜ் சிங், ரகானே, முரளி விஜய் உள்ளிட்ட நான்கு முக்கிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்தியா “ஏ” அணியில் இடம் பிடித்திருந்தனர். மற்றொரு ஆட்டத்தில் புஜாரா விளையாடினார். அவர்கள் எதிர்த்து நாங்கள் விளையாடினோம்.
வெளிநாட்டில் இருந்து வரும் அணிக்காக ஒப்பந்தம் இல்லாவிட்டாலும் சில பயிற்சி ஆட்டங்களில் இருந்தால் நன்றாக இருக்கும். தற்போது பெரும்பாலான தொடர்களில் உள்ளூர் அணிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ஆரோக்கியமானது என நான் நினைக்கவில்லை.

பாஸ்பால் கிரிக்கெட்டை இந்தியாவில் செயல்படுத்த இங்கிலாந்து முயற்சிக்கும். இதில் சந்தேகமில்லை. வெற்றி பெற அவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு என நினைக்கிறேன். ஆசியக் கண்டத்தில் டெஸ்ட் போட்டிக்கான பாரம்பரிய விதிகளை பின்பற்ற தேவையில்லை.

இவ்வாறு குக் தெரிவித்துள்ளார்.