இந்தியா பொருளாதாரத்தில் மட்டுமின்றி கலாச்சாரத்திலும் சிறந்து விளங்க வேண்டும் – மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேச்சு
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்பணித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திருநாவுக்கரசர் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய மாணவர்களை அழைத்து பிரதமர் மோடி பாராட்டினார்.
பின்னர், விழாவில் முதலில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், 9 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி திட்டங்களை தமிழகத்திற்கு பிரதமர் மோடி கொடுத்துள்ளார். திருக்குறளை உலகம் முழுவதும் எடுத்துச் சென்றவர் பிரதமர் மோடி என கூறினார்.
மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசியதாவது:-
இந்தியா பொருளாதாரத்தில் மட்டுமின்றி கலாச்சாரத்திலும் சிறந்து விளங்க வேண்டும். ஆன்மிகம், கலாச்சாரம் என பல்வேறு பெருமைகளை கொண்டது திருச்சி மாநகர். புண்ணிய தலமான திருச்சிக்கு பிரதமர் மோடியை வரவேற்கிறோம். தமிழ்நாட்டின் தூய்மையான நகரமாக திருச்சி விளங்குகிறது. திருச்சியின் வரலாற்றில் இன்று புதிய அத்தியாயம். சாதாரண குடிமகன் கூட விமானத்தில் பயணிக்கும் நிலையை பிரதமர் ஏற்படுத்தியுள்ளார். 2032-க்குள் 42 கோடி மக்கள் விமான பயணம் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறினார்.