Tamilசெய்திகள்

தொழிற்சாலையில் இருந்து கசிந்த அமோனியா வாயு – எண்ணூர் மக்கள் போராட்டத்தினால் பரபரப்பு

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள உர தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் திடீரென அமோனியம் வாயு வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.

இதனால் பதற்றம் அடைந்த பொதுமக்கள் தங்களை வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் பதற்றம் அடையாமல் வீடுகளுக்கு செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

இதனிடையே, எண்ணூர் கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனியார் தொழிற்சாலையின் திரவ அமோனியம் எடுத்து வரும் குழாயிலிருந்து அமோனியா வாயு கசிந்ததை மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது. ஆலை வாசலில் காற்றில் 400 microgram/m3 ஆக இருக்க வேண்டிய அமோனியா, 2090 microgram/m3 ஆகவும் கடலில் 5mg/L ஆக இருக்க வேண்டிய அமோனியா 49mg/L இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே குழாயை இயக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், அமோனியம் வாயு வெளியேறிய தனியார் தொழிற்சாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலையின் நுழைவுவாயிலில் நிறுத்தப்பட்டிருந்த போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது.

முதியோர்கள், பெண்கள் முககவசம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- வாயு கசிவு குறித்து தொழிற்சாலை நிறுவனம் எந்த முன் அறிவிப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. சாலையில் சென்றவர்கள் தான் வீட்டு கதவுகளை தட்டி வெளியே வருமாறு கூறினர். அதன்பின்னரே வாயு கசிவு விவரம் குறித்து தங்களுக்கு தெரியவந்ததாக கூறினர். மேலும் கடலில் வாயு கசிந்ததால் வாழ்வாதாரம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவும் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.