Tamilசெய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் தென் மாவட்டங்கள் – மக்களின் கடும் அவதி

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி இந்த மாவட்டங்களில் அனைத்துப் பகுதிகளிலும் கனமழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து நேற்று அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய மழை இன்று (திங்கட்கிழமை) மதியம் வரை நீடிக்கிறது. நேற்று பகல் முழுவதும் 3 மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் இன்றும் தொடர்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளது.

இதனால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நகர பகுதியில் உள்ள சாலைகள், தெருக்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளும் வெள்ளத்தில் வெள்ளத்தில் மிதக்கின்றன. நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் அதிக கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் அதிக கனமழை பெய்து வருகிறது.

தொடர்ந்து 2 நாட்களாக சுமார் 30 மணி நேரத்துக்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்து உள்ள பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணை பகுதிகளிலும் கனமழை பெய்வதன் காரணமாக காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. பாபநாசம் பாணதீர்த்த அருவியில் இருந்து காட்டாற்று வெள்ளம் வெளியேறுவதால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி சுமார் 32,000 கனஅடி நீர் பாபநாசம் அணையில் இருந்து திறந்து விடப்படுகிறது. இது தவிர மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து 27 ஆயிரம் கன அடியை கடந்து இருப்பதால் அந்த அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

மேலும் கடனா அணையில் இருந்து 4500 கன அடி நீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் தற்போது 60 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது. அங்கு இரு கரைகளையும் தொட்ட படி வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. கொக்கிரகுளம் சுலோச்சனா முதலியார் பாலம் மற்றும் அதன் அருகில் அமைக்கப்பட்டு உள்ள புதிய பாலம் ஆகியவற்றை தொட்டபடி வெள்ளம் செல்கிறது.

இதன் காரணமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் தண்ணீர் புகுந்து உள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அங்கும் பொதுமக்கள், அதிகாரிகள் யாரும் செல்ல முடியாத வகையில் வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது. மாநகரப் பகுதியில் மேலப்பாளையம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வாறுகால்களில் அடைப்பு, சாலையோர ஆக்கிரமிப்புகள் உள்ளிட்டவற்றின் காரணமாக மழை நீர் செல்வதற்கு வழி இல்லாமல் கழுத்து அளவுக்கு தேங்கி நிற்கிறது.

நெல்லை மாநகரப் பகுதியில் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கிறது. பழைய பேட்டையில் தொடங்கி வழுக்கோடை, தொண்டர் சன்னதி, நயினார் குளம் சாலை, டவுன் ரத வீதிகள், நெல்லையப்பர் கோவிலை சுற்றி அமைந்து உள்ள தெருக்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வழுக்கோடை பகுதியில் வாறுகால் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அங்கும் காட்டாற்று வெள்ளம் போல மழைநீர் ஓடுகிறது. காட்சி மண்டபம், கோடீஸ்வரன் நகர் உள்ளிட்ட பகுதிகள் தீவுகள் போல் காட்சி அளிக்கிறது.

இதுபோல் எஸ். என். ஹைரோட்டில் தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் தேங்கி நிற்கிறது. சந்திப்பு பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. சந்திப்பு மீனாட்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில், சி.என். கிராமம், தச்சநல்லூர், சிந்து பூந்துறை, சமாதானபுரம், கே.டி.சி. நகர், ரஹ்மத் நகர், தியாகராஜ நகர், மகாராஜா நகர், அன்பு நகர், பொதிகை நகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. ஒரு சில இடங்களில் பாலங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாலும், கால்வாய் நிரம்பி வழிவதாலும் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டு உள்ளது.

பெரும்பாலான காம்பவுண்டுகளில் வசிக்கும் குடும்பங்கள் பாதுகாப்பாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டு உள்ள முகாம்களில் மீட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். டவுன் குறுக்குத் துறையில் இருந்து கருப்பன் துறை வழியாக மேலப்பாளையத்துக்கு செல்லும் தரைப்பாலம் மூழ்கி விட்டது. தீயணைப்புத் துறையினரும் மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து மாநகரப் பகுதி முழுவதும் வெள்ளம் புகுந்த வீடுகளில் தத்தளிக்கும் மக்களை பாதுகாப்பாக மீட்டு தங்க வைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். திருப்பணி கரிசல்குளம், பேட்டை, திருவேங்கடநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் குளங்களில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளை குளத்தில் இருந்து வெளியேறும் நீர் சூழ்ந்துள்ளது.

இதனால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். தொடர் மழையின் காரணமாக நெல்லை மாநகராட்சி முழுவதுமாக வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. இன்று காலை முதல் மாநகரப் பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டு உள்ளதால் பொதுமக்களின் பாடு மேலும் திண்டாட்டமாகி வருகிறது. இன்று காலை 7 மணி நிலவரப்படி மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 60 செ.மீ. மழை கொட்டி தீர்த்துள்ளது. அதற்கு அடுத்த படியாக பாளையில் 42 செ.மீ., அம்பாசமுத்திரத்தில் 41 செ.மீ. மழை கொட்டி தீர்த்துள்ளது. சேரன்மகாதேவியில் 40 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

நெல்லை புதிய பஸ் நிலையப் பகுதியில் அமைந்துள்ள வேய்ந்தான் குளமும் நிரம்பி விட்டதால் பஸ் நிலையத்தில் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல்லையிலிருந்து மற்றும் கன்னியாகுமரியில் இருந்து வடக்கு மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய பெரும்பாலான பஸ்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாநகரப் பகுதியிலும் இயங்கி வரும் பஸ்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள சுமார் 1200 குளங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் கடந்த 2 நாட்களில் பெய்த மழையின் காரணமாக நிரம்பும் தருவாயில் இருக்கிறது. அதே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் நெல் நடவு பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் வயல்களில் தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் நாற்றுகளை மூழ்கடித்தபடி தேங்கிக் கிடக்கிறது. மாவட்டத்தில் ராதாபுரம், திசையன்விளை, கூடங்குளம், உவரி உள்ளிட்ட கட லோர பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கூட்டப்பனை கூடுதாழை மற்றும் 9-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் ரெட் அலர்ட் எச்சரிக்கையில் இருந்து மஞ்சள் அலர்ட்டுக்கு மாறி உள்ளது. இதனால் இன்று காலை சற்று மழை குறைந்துள்ளது. எனினும் பெரும்பாலான இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்த வண்ணம் உள்ளது. தென்காசி மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் கனமழையின் காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். மாவட்டத்தில் ஏற்கனவே வடகிழக்கு பருவமழை காரணமாக ஒரு சில அணைகளை தவிர மற்ற அனைத்து அணைகளும் நிரம்பி விட்ட நிலையில் குளங்கள் உள்ளிட்டவற்றுக்கு நீர்வரத்து வந்து கொண்டிருந்தது. தற்போது 2 நாட்களாக பெய்து வரும் அதிக கனமழையின் காரணமாக அணைகளுக்கு வரும் நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளிலும் வெளியேறும் தண்ணீர் சிற்றாறு கால்வாய் மூலமாக குளங்களை வேகமாக நிரப்பி வருகிறது. ஏற்கனவே 50 சதவீதத்திற்கும் மேலாக குளங்கள் நிரம்பிய நிலையில் தற்போது பெய்த மழையால் இதுவரை பல ஆண்டுகளாக நிரம்பாமல் இருந்த குளங்கள் கூட ஒரே நாள் இரவில் பெய்த மழையால் நிரம்பிவிட்டன. தென்காசி, ஆய்க்குடி, செங்கோட்டை, சிவகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்த வண்ணம் உள்ளது.

இதேபோல் சங்கரன்கோவில், பாவூர்சத்திரம், சுரண்டை, கடையம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக நீர் நிலைகள் நிரம்புவதோடு காட்டாற்று வெள்ளமும் கரைபுரண்டு ஓடுகிறது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 நாட்களாக கொட்டி தீர்க்கும் மழையின் காரணமாக 5 ஆண்டுகளுக்கு மேல் நிரம்பாத பெரும்பாலான குளங்கள் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்து உள்ளது. காயல்பட்டினம் பகுதியில் மட்டும் இன்று காலை நிலவரப்படி சுமார் 93 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று அங்கு அதிக அளவு மழை பொழிந்து உள்ளது. இதேபோல் திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. அங்கும் இதுவரை இல்லாத அளவுக்கு கனமழை பெய்து உள்ளது. திருச்செந்தூரில் அதிகபட்சமாக 69 செ.மீ., ஸ்ரீவைகுண்டத்தில் 61 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கோவில்பட்டியில் 49 செ.மீ., சாத்தான்குளத்தில் 46 செ.மீ.மழை பதிவாகியுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஏற்கனவே வடகிழக்கு பருவமழையால் பெரும்பாலான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து அதிலிருந்து பொதுமக்கள் தற்போது மீண்ட நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பொதுமக்களின் வாழ்க்கை மேலும் சிரமம் அடைந்துள்ளது. மாநகர பகுதி முழுவதும் தீவு போல் காட்சியளிக்கிறது. ஒட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 35 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்து உள்ளது.

3 மாவட்டங்களிலும் கிராமங்கள் தனித்தனி தீவாக மாறி விட்டதால் லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை இன்று முடங்கி போனது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் தகவல் தொடர்பையும் மக்கள் இழந்துள்ளனர். இதனால் மக்களை மீட்க முப்படைகளும் உதவிக்கு விரைந்து கொண்டிருக்கின்றன. அமைச்சர்கள் தலைமையில் தீவிர ஆலோசனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.