மாணவர்களை கொண்டு குடிநீர் தொட்டியை சுத்தம் செய்வதா? – டாக்டர்.அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை கொரட்டூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியை அப்பள்ளியில் பயிலும் நான்காம் வகுப்பு மாணவர்கள் சிலர் மிகவும் ஆபத்தான சூழலில் தூய்மைப்படுத்தும் காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. மாடியை ஒட்டி அமைந்துள்ள குடிநீர்த் தொட்டியின் மீது ஏறி எந்த பிடிமானமும் இல்லாமல் சில மாணவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மேல் மின்சாரக் கம்பி செல்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்ற சூழலில் மாணவர்களை குடிநீர்த் தொட்டியை தூய்மைப்படுத்தும் பணியில் பள்ளி நிர்வாகம் ஈடுபடுத்தியது கண்டிக்கத்தக்கது. அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அவை சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு பள்ளிகளின் பராமரிப்புக்காக அரசு கூடுதல் தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் பள்ளிகளின் பராமரிப்புப் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.