ஹமாஸ் அமைப்புக்கு இந்தியாவில் தடையா? – மத்திய இணை அமைச்சர் விளக்கம்
பாலஸ்தீனம்- இஸ்ரேல் இடையே நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. இஸ்ரேல் எல்லையில் உள்ள காசா முனையில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இவர்களை ஒரு சில நாடுகள் பயங்கரவாத அமைப்பு என்று அழைத்த போதிலும், பெரும்பாலான நாடுகள் அவ்வாறு அறிவிக்கவில்லை. காசாவில் ஹமாஸ் தனியாக ஆட்சி அதிகாரம் செய்து வருகிறது.
இந்த நிலையில்தான் அக்டோபர் மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து எதிர்பாராத வகையில் கொடூர தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சுட்டும், தலையை துண்டித்தும் கொலை செய்தனர். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. மேலும், பச்சிளம் குழந்தைகள் முதல் முதியோர் வரை 240-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதனால் ஹமாஸ் அமைப்பினரை பகிரங்கமாக பயங்கரவாத அமைப்பு என அறிவிக்க வேண்டும் என இஸ்ரேல் உலக நாடுகளை வற்புறுத்தி வருகிறது. ஹமாஸ் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. இஸ்ரேலுக்கு துணை நிற்பதாக இந்திய பிரதமர் தெரிவித்தார். இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர், இந்தியா ஹமாஸை பயங்கரவாத அமைப்பு என அறிவிக்க வேண்டும் என நேரடியாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில்தான் பாராளுமன்றத்தில் ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என அறிவிக்கப்பட வேண்டும் என்ற கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லெகி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்ததாகவும், கடிதம் ஒன்று வெளியானது.
இந்த கடிதத்தை மேற்கோள்காட்டி, இந்தியாவில் ஹமாஸ் அமைப்பை தடைசெய்யும் முன்மொழிவு ஏதேனும் உள்ளதா? என ஒருவர் மீனாட்சி லெகியை டேக் செய்து கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த மீனாட்சி லெகி, “உங்களுக்கு தவறாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேள்வி மற்றும் பதிலுடன் நான் எந்த பேப்பரிலும் கையெழுத்திடவில்லை” என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து பதில் அளித்துள்ளார்.