Tamilசினிமா

இயக்குநர் அமீர் பற்றி இயக்குநர் சுதா கொங்கரா வெளியிட்ட பதிவு வைரலாகிறது

இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து பரிமாற்றம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக திரைத் துறையை சேர்ந்த சிலரும், இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சிலரும் தங்களின் கருத்துக்களை இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில், இயக்குனர் சுதா கொங்கரா இயக்குனர் அமீர் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கும் பதிவு வைரல் ஆகி வருகிறது. அந்த பதிவில், “2016, பிப்ரவரி 2-ம் தேதி அமீர் அண்ணாவிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அப்போது நான் பிரசாத் ஸ்டீடியோஸ்-க்கு வெளியே வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்.”

“அந்த சமயத்தில் இறுதி சுற்று படத்துக்காக திரைத்துறையில் இருந்து என்னை பாராட்டிய வெகு சிலரில் அவரும் ஒருவர் என்பதால், அந்த தருணம் எனக்கு அப்படியே நினைவில் இருக்கிறது. அப்போது நான் அவரிடம் கூறியது ஒன்று மட்டும்தான், மதி என்ற கதாபாத்திரத்தை நான் எழுதுவதற்கு முதல் காரணம் முத்தழகு தான்.”

“மேலும் ஒரு ஆண் எழுதிய மிகச் சிறப்பான பெண் கதாபாத்திரம் பற்றி நான் பேசினேன். மதி மற்றும் பொம்மி என இரு கதாபாத்திரங்களில் நடிக்கும் முன், இரண்டு நடிகைகளையும் நான் பருத்தி வீரன் படத்தை எடுத்துக்காட்டுக்காக பார்க்க வைத்தேன். தமிழ் சினிமாவின் சிறந்த படைப்பாளிக்கு நான் செய்யும் மரியாதை இது மட்டும்தான். நான் கூற விரும்புவதும் இதை மட்டும்தான்,” என்று குறிப்பிட்டுள்ளார்.