8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து!
கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ‘குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம்’, 8-ம் வகுப்புவரை எந்த மாணவரையும் ‘பெயில்’ ஆக்குவதற்கு தடை விதிக்கிறது. அதன்படி, 8-ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களும் கட்டாய தேர்ச்சி (ஆல் பாஸ்) செய்யப்பட்டு வருகிறார்கள்.
இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்யும்வகையில், இந்த சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. அம்மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த மசோதா, நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதனால், இரு அவைகளின் ஒப்புதலையும் மசோதா பெற்று விட்டது. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மசோதா மீதான விவாதத்துக்கு பதில் அளித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-
இந்த திருத்த மசோதாவின்படி, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதியில் வழக்கமான தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும். அதிலும் தேர்ச்சி அடையாத மாணவர்களை ‘பெயில்’ ஆக்கி, அதே வகுப்பில் மீண்டும் படிக்க செய்ய சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கலாம். இதில், மாநில அரசுகளே இறுதி முடிவு எடுக்கலாம்.
இந்த சட்டத்தால், படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று உறுப்பினர்கள் கவலைப்படுவது சரியல்ல. போட்டி உணர்வை உருவாக்குவதே சட்டத்தின் நோக்கம். எந்த மாணவரும் இடைநீக்கம் செய்யப்பட மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.