Tamilசெய்திகள்

தென் மாவட்டங்களில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை – நீர்நிலைகள் நிரம்பின

தமிழகத்தில் குமரி கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மாலை நேரங்களில் மழை பெய்து வந்தன. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று காலை வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் கருமேகங்கள் திரண்டன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் சாத்தூர், விருதுநகர், காரியாபட்டி ஆகிய பகுதிகளில் மாலையில் மழை கொட்ட தொடங்கியது.

4 மணிக்கு தொடங்கி மழை 2 மணிநேரம் வெளுத்து வாங்கியது. இதனால் முக்கிய சாலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இரவிலும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலை வரை தொடர்ந்து பரவலாக மழை நீடித்ததால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. குறிப்பாக ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக அய்யனார்கோவில் ஆறு, முள்ளி ஆறு, பேயனாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. ராஜபாளையம் நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் 6-வது மைல் நீர்தேக்க ஏறி நிரம்பும் தருவாயில் உள்ளது. ஏற்கனவே பெய்த மழையில் தேவதானம் சாஸ்தா அணையில் நிரம்பி விட்டது.

ராஜபாளையம் சுற்று வட்டார பகுதியில் உள்ள 108 கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். பரவலாக பெய்து வரும் மழையால் விவசாயிகள் உழவு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நேற்று பெய்த தொடர் மழையில் மம்சாபுரம் முத்துகருப்ப நாடார் தெருவில் உள்ள ஒரு வீடு இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு உடனே சென்று வீட்டின் இடிபாடுகளில் சிக்கிய வன்னியராஜ் (வயது62) என்பவரை காயங்களுடன் மீட்டனர்.

வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி மலை பகுதியிலும் கொட்டி தீர்த்த மழையால் பல பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- திருச்சுழி-30, ராஜபாளையம்-114, காரியாபட்டி-60, ஸ்ரீவில்லிபுத்தூர்-108, விருதுநகர்-69, சாத்தூர்-58, சிவகாசி-46, பிளவக்கல்-53, வத்திராயிருப்பு-34.2, கோவிலாங்குளம்-85.8, வெம்பக்கோட்டை-22, அருப்புக்கோட்டை-40. மொத்த மழை அளவு 720.3 ஆகும். சிவகங்கை மாவட்டத்திலும் நேற்று மாலை முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சிவகங்கை நகர் காளையார்கோவில், தேவகோட்டை, திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இன்று காலையும் மழை நீடித்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தேவகோட்டையில் நேற்று இரவு தொடங்கிய மழை நிற்காமல் விடிய விடிய பெய்தது. இதில் 23-வது வார்டு மாட்டுச்சந்தை ஆற்றங்கரை பகுதியில் ஈரப்பதம் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. வீட்டில் தூங்கியிருந்த செல்வம்(50), அவரது மனைவி பார்வதி, மகள் ஆகிய 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், நகர் மன்ற உறுப்பினர் தனலட்சுமி நல்லூர்பாண்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தேவையான உதவிகளை செய்தனர்.

மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

சிவகங்கை-30, மானாமதுரை-36, திருப்புவனம்-77, தேவகோட்டை-39, காளையார் கோவில்-48. மொத்த மழை அளவு-272.10 ஆகும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக மழை பெய்து வருகிறது. கடற்கரை மாவட்டமான இங்கு பலத்த சூறாவளி காற்று, கடல் கொந்தளிப்பு காரணமாக மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டது. நேற்று மதியம் முதல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. ராமநாதபுரம் நகர், திருவாடானை, தொண்டி, பரமக்குடி, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ராமேசுவரத்தில் தொடர் மழையால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்பட்டது. தனுஷ்கோடியில் வழக்கத்தை விட கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதை தடுக்க கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்.எஸ்.மல்கலம் பகுதியில் பெய்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் தண்ணீரை அகற்றினர். இருப்பினும் தொடர் மழையால் தண்ணீரை அகற்ற சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயிர்கள் அழுகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

வாலிநோக்கம்-62, பரமக்குடி-48, ஆர்.எஸ்.மங்கலம்-46, ராமநாதபுரம்-40, தீர்த்தாண்டதானம்-63, திருவாடானை-73, தொண்டி-95, வட்டாணம்-56. மொத்த மழை அளவு-547 ஆகும் .

3 மாவட்டங்களில் விடியவிடிய மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. சிவகங்கை, விருதுநகரில் இன்று காலையும் சிலஇடங்களில் மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனாலும் 9 மணி வரை எந்த அறிவிப்பும் வரவில்லை. இதனால் பல பகுதிகளில் மாணவர்கள் மழையில் நனைந்தபடி பள்ளிக்கு செல்வதை காண முடிந்தது. சில தனியார் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டது.