தீபாவளியை முன்னிட்டு தாம்பரம் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் வசிக்கும் தென்மாவட்டங்களை சேர்ந்தோர், அதிக அளவில் சொந்த ஊர் செல்வார்கள். ஏற்கனவே, வழக்கமான ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன. அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும் டிக்கெட் இல்லாத நிலை உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தென்னக ரெயில்வே தாம்பரம்- நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் செய்தியை வெளியிட்டுள்ளது. வரும் 10, 17 மற்றும் 24-ந்தேதிகளில் இருந்து இந்த சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு விடப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து (06061) மாலை 7.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில் மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். 9 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 6 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகள், ஒரு இரண்டு அடுக்கு ஏ.சி. பெட்டிகள், இரண்டு முன்பதிவு இல்லாத பெட்டிகள் கொண்ட ரெயிலாக இயக்கப்பட இருக்கிறது.
இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். அதேபோல் நாகர்கோவில்- மங்களூரு இடையே வரும் 11, 18 மற்றும் 18-ந்தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. மங்களூரு- தாம்பரம் இடையே 12, 19 மற்றும் 26-ந்தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த மூன்று ரெயில்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.