ஆளுநர் ஆர்.என்.ரவியின் கூறுவது முற்றிலும் திசை திருப்பும் முயற்சி – திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தனது எக்ஸ் பக்கத்தில் “நாகாலாந்து மக்களை நான் இழுவுப்படுத்தியதாக ஆளுநர் ஆர்.என. ரவி கூறுவது முற்றிலும் திசைதிருப்பும் முயற்சி. நாகாலாந்து மக்கள் நாய்க்கறி உண்பது அவர்களின் கலாச்சாரம் என்பதனை கவுகாத்தி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உறுதி செய்துள்ளது” என ஆளுநர் ஆர்.ரவியின் கண்டனத்திற்கு விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக, திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி, கருணாநிதி நூற்றாண்டு விழா கூட்டம் ஒன்றில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை கடுமையாக விமர்சித்து பேசினார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு அரசை வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பதாகவும், தமிழ்நாடு அரசு அனுப்பும் மசோதாக்களை கிடப்பில் போடுவதாகவும் குற்றம்சாட்டினார்.
நாகாலாந்திலே ஆளுநர் ஆர்.என். ரவிக்கு நடந்தது என்ன தெரியுமா? ஊரை விட்டே விரட்டியடித்தனர். தப்பா நினைத்துக் கொள்ளக்கூடாது, ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன். நாகாலாந்து மக்கள் நாய்க்கறி உண்பார்கள், அவர்களே அங்கு ஆளுநராக இருந்த ஆர்.என். ரவியை அனுப்பிவிட்டார்கள், அப்போது உப்பு போட்டு சாப்பிடும் தமிழர்களாகிய நாம் என்ன செய்வோம் என ஆர்.எஸ்.பாரதி ஆவேசமாக பேசியிருந்தார். ஆர்.எஸ். பாரதியின் பேச்சுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் “நாகாலாந்து மக்களை பகிரங்கமாக இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது” என தெரிவித்தார்.
மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி. கூறியதாக தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்ட பதிவில், “நாகா இன மக்கள் துணிச்சல் மிக்கவர்கள், நேர்மையானவர்கள். கண்ணியமானவர்கள். அவர்களை திமுக-வின் ஆர்.எஸ். பாரதி நாய்க்கறி உண்பவர்கள் என பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது, ஏற்க முடியாதது. மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது என ஆர்.எஸ். பாரதியை வலியுறுத்துகிறேன்” எனக்குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அதற்கு ஆர்.எஸ். பாரதி விளக்கம் அளித்துள்ளார். திமுக அரசு- தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஆளுநர், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது, திமுக-வின் கொள்கையை விமர்சிப்பது போன்ற செயல்களால் தற்போது நீதிமன்றத்தில் திமுக அரசு மனு தாக்கல் செய்துள்ள நிலைக்கு சென்றுள்ளது.