Tamilசெய்திகள்

38 மாவட்டங்களில் ஆரோக்கிய நடைபாதை திறப்பு – சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

நடைபயிற்சிக்காக தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் 8 கிலோ மீட்டர் தூர ஆரோக்கிய நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் பெசன்ட் நகரில் அமைக்கப்பட்டு உள்ளது. தொடங்கும் இடத்திலேயே நடந்து முடிக்கும் வகையில் இந்த பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆரோக்கிய நடைபாதை திறப்பு விழா இன்று காலை பெசன்ட்நகரில் நடந்தது.

கொட்டும் மழையில் முத்துலெட்சுமி பூங்காவில் இருந்து கடற்கரை வரை 2.5 கிலோ மீட்டர் தூரம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடந்து சென்றார். பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் 38 மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டு உள்ள நடைபாதைகளை காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அந்த அந்த மாவட்ட கலெக்டர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்கள்.

சென்னையில் நடைபாதைக்கான கல்வெட்டையும் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து என்.ராம் ஆகியோர் பேசினார்கள்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, மற்ற நிகழ்ச்சிகளைவிட இது வித்தியாசமானது. மக்களின் ஆரோக்கியத்தை பேணுவதற்கான திட்டம். நாங்களெல்லாம் அமைச்சர் மா.சுப்பிரமணியனை மா.சு என்று செல்லமாக அழைப்போம். முதலமைச்சர் மாரத்தான் சுப்பிரமணியன் என்பார். எங்களுக்கு மா.சு தான் ரோல் மாடல். ஆனால் அவருக்கு முதலமைச்சர் ரோல் மாடல் என்றார்.

ஆரோக்கிய நடைபாதைகளில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச மருத்துவ பரிசோதனை முகாமும் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.