திரையரங்கிற்கு சென்று படம் பாருங்கள் – நடிகை கங்கனா ரணாவத் வேண்டுகோள்
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் சமீபத்தில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படத்தில் ராகவா லாரன்ஸுடன் நடித்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதைத்தொடந்து கங்கனா ரணாவத்தின் ‘தேஜஸ்’ திரைப்படம் 27-ஆம் தேதி வெளியானது. சர்வேஷ் மேவாரா இயக்கிய இந்தப் படத்தில் கங்கனா விமானப்படை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூலில் சரிவைச் சந்தித்து வருகிறது. கூட்டம் இல்லாததால் பல திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், நடிகை கங்கனா ரசிகர்களுக்குக் கோரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கொரோனாவுக்கு முன்பே திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவது குறைந்தது. அதற்குப் பின் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இலவச டிக்கெட்டுகள் உட்பட நியாயமான சலுகைகள் வழங்கப்பட்டும் பல திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. அந்தச் சரிவு தொடர்கிறது. அதனால், திரையரங்குகளுக்குச் சென்று படங்களைக் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பார்த்து மகிழுங்கள். இல்லை என்றால் திரையரங்கை நடத்துகிறவர்கள் வாழ முடியாது” என்று தெரிவித்துள்ளார்.