Tamilவிளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் – இன்று இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதல்

10 நாடுகள் பங்கேற்றுள்ள 13-வது ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் நேற்று முன் தினத்துடன் தலா 3 ஆட்டத்தில் விளையாடி விட்டன. நேற்று முதல் 4-வது போட்டியில் ஆடுகின்றன.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தான் மோதிய 3 ஆட்டத்திலும் வென்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லியில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்திலும், அகமதாபாத்தில் நடந்த 3-வது போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது.

இந்திய அணி 4-வது ஆட்டத்தில் வங்காளதேசத்துடன் இன்று (அக்.19) மோதுகிறது. புனேவில் பிற்பகல் 2 மணிக்கு இந்தப் போட்டி நடக்கிறது. வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்திலும் இந்தியாவின் அதிரடி தொடருமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் கடைசியாக ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் கடந்த 15-ந் தேதி மோதின. இதில் வங்காளதேசம் 6 ரன்னில் வெற்றி பெற்றது.

கடைசி 5 போட்டி தொடரில் இந்தியா 2-3 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இதனால் வங்காளதேசத்துக்கு எதிராக இந்திய வீரர்கள் மிகவும் கவனமுடன் விளையாட வேண்டும். 2007 உலகக் கோப்பையில் அந்த அணியிடம் தோற்று லீக் சுற்றில் வெளியேறி இருந்தது. இந்தப் போட்டித் தொடரில் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானுடனும், தென்ஆப்பிரிக்கா அணி நெதர்லாந்துடனும் அதிர்ச்சிகரமாக தோற்று இருந்தது.

கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவர் சதம், அரைசதத்துடன் 217 ரன்கள் எடுத்துள்ளார். இதே போல விராட் கோலி (156), லோகேஷ் ராகுல் (116) ஆகியோரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

பந்து வீச்சில் பும்ரா 8 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். ஜடேஜா, ஹர்த்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் (தலா 5 விக்கெட்), முகமது சிராஜ் (3 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஷகீப்-அல்-ஹசன் தலைமையிலான வங்காள தேசம் 1 வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி ஆப்கானிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. இங்கிலாந்திடம் 137 ரன் வித்தியாசத்திலும், நியூசிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்று இருந்தது. வங்காளதேச அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது. ஆனால் அதே சமயத்தில் அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இந்த தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லை.