Tamilசெய்திகள்

இஸ்ரேலில் இருந்து 286 இந்தியர்கள், 18 நேபாள குடிமக்களுடன் 5 வது விமானம் டெல்லி வந்த்டைந்தது

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது திடீரென சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்த இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த போரால் இஸ்ரேல் மற்றும் காசாவில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள். அவர்களை அங்கிருந்து பத்திரமாக மீட்க மத்திய அரசு களத்தில் இறங்கி இருக்கிறது. இதற்காக ‘ஆபரேஷன் அஜய்’ என்ற பெயரில் அதிரடி மீட்பு நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்து உள்ளது. அதன்படி இஸ்ரேலில் இருந்து 286 இந்தியர்கள், 18 நேபாள குடிமக்களுடன் 5வது விமானம் டெல்லி வந்தடைந்தது. அவர்களை மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார்.

பின்னர் அவர் கூறுகையில், “இந்தியர்கள் எங்கெல்லாம் சிக்கித் தவிக்கிறார்களோ, அவர்களை மீட்டெடுப்பதே எங்கள் முன்னுரிமை. நாங்கள் ஆபரேஷன் கங்கா மற்றும் ஆபரேஷன் காவேரியை வெற்றிகரமாக நடத்தி, இப்போது ஆபரேஷன் அஜய்யின் கீழ் நாங்கள் இஸ்ரேலில் இருந்து மக்களை அழைத்து வருகிறோம். இது ஐந்தாவது விமானம், நாங்கள் ஏற்கனவே செய்துள்ளோம். 1180 பேரை வீட்டிற்கு அழைத்து வந்தோம். வெளியேற்றத்தை தொடங்கும் முதல் நாடு நாங்கள் தான், மேலும் எங்கள் அண்டை நாடுகளை சேர்ந்தவர்களையும் அழைத்து வருகிறோம்.” இவ்வாறு அவர் கூறினார்.