திமுக மகளிர் அணி சார்பில் நடத்தப்படும் மாநாட்டில் சோனியா காந்தி பங்கேற்பு – முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு
சென்னையில் தி.மு.க. மகளிர் அணி ஏற்பாட்டில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு மகளிர் உரிமை மாநாடு இன்று நடைபெறுகிறது. இதற்காக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு திடலை சுற்றிலும் 300 ராட்சத பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில் கலைஞர் அகில இந்திய தலைவர்கள், முன்னாள் பிரதமர்கள், ஜனாதிபதிகள் ஆகியோரை சந்தித்து பேசியது. முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றது உள்ளிட்ட அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த மகளிர் நல திட்டங்கள் தொடர்பான புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சோனியா, பிரியங்கா ஆகியோர் நேற்று இரவே சென்னை வந்தனர். அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார். அவருடன் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., டி.ஆர்.பாலு எம்.பி., காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட தி.மு.க. மற்றும் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் வரவேற்றனர். பின்னர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினர். இன்று மாலை 5 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. மாநாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகிக்கிறார்.
இந்த மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, ஐக்கிய ஜனதாதள தேசிய நிர்வாக குழு உறுப்பினரும் பீகார் மாநில மந்திரியுமான லெஷிசிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர் ஆனிராஜா, ஆம் ஆத்மி கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ராக்கி பிட்லன், திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவ், சமாஜ்வாடி எம்.பி. டிம்பிள் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே ஆகியோர் பேசுகிறார்கள். நிறைவாக சோனியா காந்தி விழா பேரூரையாற்றுகிறார்.
இந்தியா கூட்டணி அமைத்த பிறகு இதுவரை பொதுக்கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. மகளிர் உரிமை மாநாடு என்று நடத்தப்பட்டாலும் இந்தியா கூட்டணி கட்சிகளின் பெண் தலைவர்கள் அனைவரும் இதில் பங்கேற்கிறார்கள். எனவே இது இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டமாகவே எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்திய பெருமை காங்கிரசுக்கு உண்டு. தற்போது பா.ஜனதா அரசு மசோதாவை நிறைவேற்றினாலும் உடனடியாக அமல்படுத்தாததை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. தேர்தலுக்கான ஏமாற்று வேலை என்றும் குற்றம் சாட்டுகின்றன. இந்த சூழலில் இந்தியா கூட்டணி சார்பில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகளை சோனியா காந்தி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.