Tamilசெய்திகள்

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம் – டெல்வா விவசாயிகள் கவலை

பருவமழை காலங்களில் பெய்யும் மழை நீரை சேமித்து வைத்து பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 1934-ம் ஆண்டு காவிரியின் குறுக்கே மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந்தேதி வரை காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். இதன் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 12 டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்களில் சம்பா, குறுவை, தாளடி என முப்போக சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் மாதம் 12-ந் தேதிக்கு முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ அணையில் இருந்து பாசன தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு கடந்த ஜூன் மாதம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடி அளவில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் டெல்டா பாசனத்துக்கு ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகள் பயிர் சாகுபடி தீவிரமாக மேற்கொண்டனர். இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக பாசன தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை தொடர்ந்து வழங்கப்படும். இதையடுத்து அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்படும்.

ஆனால் நடப்பு ஆண்டு பருவமழை கைகொடுக்கவில்லை. அதுமட்டும் அல்லாமல் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் முதல் இன்று வரை 125 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்திற்கு வழங்கி இருக்க வேண்டும். இந்த தண்ணீரை கர்நாடக அரசு வழங்கவில்லை. ஆனால் 46 டி.எம்.சி நீர் மட்டுமே வந்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து பெயரளவிலேயே தண்ணீர் திறந்து விட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு 163 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 30.99 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 7.88 டி.எம்.சி.யாக குறைந்துள்ளதால் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை டெல்டா பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே மேட்டூர் அணையில் மீன் வளம் மற்றும் குடிநீர் தேவைக்காக அணையில் 30 அடி வரை தண்ணீர் இருப்பு வைக்க வேண்டும். இதனால் குடிநீர் மற்றும் மீன் வளம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு இன்று காலை 6 மணிக்கு நிறுத்தப்பட்டது. அதாவது சுமார் 110 நாட்களுக்கு முன்னதாகவே அணையில் இருந்து பாசன தேவைக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் டெல்டா பாசன தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருவதால் பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு 4 மாதங்களுக்கு பிறகு இன்று நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதம் முதல் இதுவரை 91 டி.எம்.சி. அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் சேலம் மாநகராட்சி, ஆத்தூர், வேலூர், காடையாம்பட்டி ஆகிய கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தினாலும் குடிநீர் தேவைக்கு மாதம் 2 டி.எம்.சி வரை டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும். அணையில் தற்போது 8 டி.எம்.சி தண்ணீர் அணையில் இருப்பு உள்ளது என்றார்.