ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023 – கிரிக்கெட்டில் இந்திய ஆண்கள் அணி நேபாளத்தை வீழ்த்தி வெற்றி
ஆசிய விளையாட்டில் ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று முதல் காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன. இன்று காலை நடைபெற்ற முதல் காலிறுதியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் சதமடித்து அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ரிங்கு சிங் 15 பந்தில் 37 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து, 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் அணி களமிறங்கியது. திபேந்திர சிங் 32 ரன்னும், சந்தீப் ஜோரா, குஷால் மல்லா 29 ரன்னும் எடுத்தனர். இறுதியில், நேபாளம் 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.