Tamilசெய்திகள்

கே.எஸ்.ஆர் அணையில் இருந்து இனி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மாட்டோம் – துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பேச்சு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலத்தில் கன்னட அமைப்புகள் சார்பில் நாளை முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த முடிவை கன்னட சங்கங்கள் கைவிட வேண்டும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. இயல்பாகவே மழை உள்ளிட்ட பிற காரணங்களால் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்திற்கு செல்லும். இன்னும் ஆயிரம் கனஅடி நீர் நாம் திறக்க வேண்டும். இந்த நீரை திறக்க மாற்று ஏற்பாடு செய்வோம். இனி எக்காரணம் கொண்டும் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி நீர் திறக்கமாட்டோம்.

தமிழகத்திற்கு கேட்ட அளவு நீரை திறக்க உத்தரவிட முடியாது என்று ஒழுங்காற்று குழு கூறிவிட்டது. தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்க மீண்டும் ஒரு முறை முழு அடைப்பு நடத்துவது ஏன்?. நாளை ( 29-ந் தேதி) மீண்டும் முழு அடைப்பு போராட்டம் நடத்தினால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் வா்த்தகம் பாதிக்கும். பள்ளி குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் முழு அடைப்பு நடத்தும் முடிவை கன்னட சங்கங்கள் கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.