Tamilசெய்திகள்

கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த திமுகவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு அமைக்கிறார்

பாராளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை எதிர்கொள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இப்போதே தங்களை தயார்படுத்தி வருகிறது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையில் ஒரு கூட்டணியும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து அமைத்துள்ள ‘இந்தியா’ கூட்டணியும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது.

இந்தியா கூட்டணியில் தி.மு.க. முக்கிய கட்சியாக விளங்குகிறது. தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணிக்கு பலம் சேர்க்கும் வகையில் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

அதுமட்டுமின்றி பிரதமர் மோடி ஆட்சியை பற்றி கடுமையாக விமர்சித்தும் வருகிறார். இப்போது முழுக்க முழுக்க தேர்தல் பணிகளில் அதில் கவனம் செலுத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அண்மையில் கூட்டி பல்வேறு ஆலோசனை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குச்சாவடி முகவர்கள் (பி.எல்.ஏ.2) கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மண்டல அளவில் இந்த கூட்டத்தை கூட்டி தேர்தல் வியூகம் குறித்து பேசி வருகிறார். தேர்தலுக்கு இன்னும் 5, 6 மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவும் தி.மு.க. ஆயத்தமாகி வருகிறது.

இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கி விட்டன. தமிழகத்தில் தி.மு.க.வும் தேர்தல் கூட்டணி அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் காதர் மொய்தீன் தலைமையில் அண்ணா அறிவாலயம் சென்று தி.மு.க. கூட்டணியில் இருப்பதை உறுதி செய்துவிட்டு வந்துள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின் போது ராமநாதபுரத்தில் தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் நவாஸ்கனி போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

இந்த முறையும் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வந்து உள்ளனர். ஆனாலும் தி.மு.க.வில் தொகுதி உடன்பாடு வரும் போது பேசி கொள்ளலாம் என்று கூறிவிட்டனர். இதே போல் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவும் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதே போல் ஒவ்வொரு கட்சியிலும் அறிவாலயம் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

இதுகுறித்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டபோது தி.மு.க.வில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குழு அமைத்து அறிவிப்பு வெளியிடுவார். இதே போல் ஒவ்வொரு கட்சியிலும் குழு அமைப்பார்கள். அதன் பிறகே அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறினார்.

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 2019-ம் பாராளுமன்றத் தேர்தலின்போது, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, ஐ.ஜே.கே., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் இடம் பெற்றிருந்தது.

இந்த தேர்தலில் ஐ.ஜே.கே. கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி விட்டது. அதற்கு பதில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வரும் வாரங்களில் ம.தி.மு.க., கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணியை உறுதிப்படுத்த அண்ணா அறிவாலயம் வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.