பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து கமல்ஹாசன் முக்கிய முடிவு எடுக்கிறார்
நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, தமிழகத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் எந்த ஒரு தொகுதியிலும் அந்த கட்சி வெற்றி பெறவில்லை. கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.
இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் கமல்ஹாசன் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். கமல்ஹாசன் போட்டியிட்டால் எந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு உள்ளது என ஆய்வு செய்யப்பட்டது. கோவை, தென்சென்னை அல்லது மதுரை ஆகிய 3 தொகுதிகளில் எதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெற்று விடலாம் என கட்சி நிர்வாகிகள் கருதுகிறார்கள்.
ஏற்கனவே கோவை தெற்கு தொகுதி சட்டசபை தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டு உள்ளதால், தொகுதி மக்களுக்கு அவர் பரீட்சயமானவராக மாறி விட்டார். இதனால் கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி எளிதாக இருக்கும் என நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து கோவை தொகுதியை குறிவைத்து கமல்ஹாசன் காய் நகர்த்தி வருகிறார். பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் வெற்றி எளிதாகும் என்பதால் தனித்து போட்டி என்ற முடிவில் இருந்து கூட்டணி அமைத்து போட்டி என்ற நிலைப்பாட்டில் கமல்ஹாசன் இருக்கிறார்.
தற்போது கமல்ஹாசன், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியுடன் நட்பு ரீதியாக நெருக்கமான நிலையில் இருக்கிறார். இதனால் காங்கிரஸ்-தி.மு.க. அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் இணைந்து அவர் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. அந்த கூட்டணியில் சேரும் பட்சத்தில் கமல்ஹாசன் எதிர்பார்க்கும் தொகுதி கிடைக்குமா என்பது சந்தேகமே? இருந்தாலும் கூட்டணி கட்சி தலைவர்களிடம் பேசி எப்படியாவது கேட்கும் தொகுதியை பெற்று விடலாம் என மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
அப்படி கேட்கும் தொகுதி கிடைக்காவிட்டால் என்ன செய்வது, அடுத்தக்கட்ட நகர்வு என்ன? என்பது பற்றியும் கமல்ஹாசன் ஆலோசித்து வருகிறார். இந்தநிலையில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் தற்போது சிறுஉரசல் ஏற்பட்டுள்ளது. அந்த அணியில் இருந்து பா.ஜ.க. வெளியேறி விட்டால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரலாமா? என்பது பற்றியும் மக்கள் நீதிமய்யம் கட்சி நிர்வாகிகள் ஆலோசித்து வருகிறார்கள்.
பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பதை நாளை மறுநாள் (22-ந்தேதி) கோவையில் நடைபெறும் கூட்டத்தில் கமல்ஹாசன் முடிவு செய்ய உள்ளார். கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டல மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பீளமேட்டில் உள்ள தனியார் ஓட்டலில் நாளை மறுநாள் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் 4 மாவட்ட நிர்வாகிகள் மட்டுமல்லாமல் மாநில நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அவர்களிடம் பாராளுமன்ற தேர்தல் குறித்து கமல்ஹாசன் ஆலோசிக்கிறார். கூட்ட முடிவில் கமல்ஹாசன், யாருடன் கூட்டணி என்பதை இறுதி செய்ய இருக்கிறார்.
கமல்ஹாசன் கோவையில் நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவை எடுக்க உள்ளதால் நாளை மறுநாள் நடைபெறும் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக கமல்ஹாசன் நாளை மறுநாள் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 10.30 மணிக்கு கோவை வருகிறார். நேராக கூட்டம் நடக்கும் ஓட்டலுக்கு சென்று கூட்டத்தில் பங்கேற்கிறார். காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. கூட்டம் முடிந்த பின்னர் மாலையில் கணியூரில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் கமல்ஹாசன் பங்கேற்கிறார். அங்கு பேராசிரியர்களுக்கு அவர் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.